கதை

அக்னி நட்சத்திரம் – புராணம் கதை

அக்னி நட்சத்திரம் குறித்து புராணம் கதை ஒன்று உள்ளது. ….. யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம்….. இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் உள்ளது….. இந்திரன் இதற்க்கு காவல் புரிந்தார். …..ஒருமுறை
யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் நீராடி மகிழும்போது….. ஓர் அந்தணர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து, “உங்களைப் பார்த்தால் கருணைமிக்கவர்களாகத் தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உதவுகிறீர்களா என்று கூற…..
அந்த அந்தணரை உற்றுப் பார்த்த கண்ணன் “அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே” என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன்.
“உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான்
கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்” என்றார்.
“அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?” என்றான் அர்ச்சுனன். “நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறான்” என்றான்.
கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், “அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத்தூணியும் அம்புகளும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை” என்றான்.
உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில், அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான்.
அப்பொழுது கண்ணன், “அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்” என்றார்.
அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க “சரக்கூடு’ ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.
அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்றார். ….இதுவே காலம் காலமாக நமக்கு அக்னி நட்சத்திர நாட்களாக வருகிறது என்று புராணம் கூறுகிறது. …..

Comment here