தமிழகம்

அண்ணாவின் வாழ்க்கை

சட்டசபையில் அண்ணாவின் பேச்சுகள் அரியணை ஏறின. அண்ணா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பல சாதனைகள் நிகழ்த்தினார். குறிப்பாக சென்னை, மதராஸ் என்று இருந்த பெயர்களை மாற்றினார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் – ஆங்கிலம் என்று இருமொழிக் கொள்கைகளைக் கொண்டுவந்தார். பெரியாரின் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி பெரியாருக்கு சிறப்பு செய்தார். ஓயாமல் உழைத்தார். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த உடலுக்கு நோய் வந்துவிட்டது. அண்ணா முதல்வராக இருக்கும்போது அவருக்கு வந்த வயிற்று வலி அவரைப் பாடாகப்படுத்தியது. பரிசோதித்ததில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. புற்றால் வந்த தீராத வயிற்று வலியால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு, நியூயார்க் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகழ்பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அண்ணாவுக்கு அறுவைசிகிச்சை செய்து முடித்தார்.

‘அண்ணா… அண்ணா…’

சிகிச்சைமுடிந்ததும் மருத்துவர்கள் அண்ணாவுக்கு சில ஆலோசனைகள் சொன்னார்கள். உடலை அதிகம் அலட்டிக்கொள்ளாதீர்கள். மேடை ஏறுவதை கொஞ்ச காலத்துக்கு தவிர்த்துக்கொள்ளுங்கள். முடியாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள். அலைச்சல் கூடாது. அதனால், சுற்றுப்பயணங்கள் வேண்டாம். இப்போது உங்களுக்குத் தேவை – ஓயாத ஓய்வு ஒன்றுதான். இப்படி அவருக்கு என்னவெல்லாமோ சொன்னார்கள். எல்லாவற்றையும் தலையாட்டி கேட்டுக்கொண்ட அண்ணா, இந்தியா வந்தார். விமானநிலைத்தில் ‘ஜேஜே’வென்று கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். உற்சாகம் குறையாமல் எட்டுத் திசைகளிலும் பார்த்தார். எங்கு திரும்பினாலும் ‘அண்ணா… அண்ணா…’ என்று குரல்கள். யோசித்தார். மக்கள் ஓயவில்லை; தொண்டர்கள் ஓயவில்லை; தம்பிகள் ஓயவில்லை; எனக்கெதற்கு ஓய்வு..? முடிவெடுத்துவிட்டார். அண்ணாவும் ஓயவில்லை. தமிழகத்துக்காக ஓயாமல் உழைத்தார். ஆனால், உடல் சும்மா இல்லை. ஓய்வு… ஓய்வு… என்று கேட்டுக்கொண்டே இருந்தது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய மூன்றாவது மாதத்தில் அண்ணாவின் உடல் தன்னிச்சையாக முடிவெடுத்து, படுத்துக்கொண்டது.

ஆமாம்! அண்ணா மீண்டும் நோயுற்றார்; அவதிப்பட்டார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்தார்கள். மீண்டும் உணவுக் குழாயையே தாக்கியிருந்தது புற்று. அண்ணா படுத்தபடுக்கையானார்; மக்கள் துயரப்படுக்கையில் வீழ்ந்தனர். அண்ணா உடல் தேர வேண்டும் என்று தமிழகமே பிரார்த்தனை செய்தது. தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்துவந்து போனார்கள். தமிழகத்தையே பதற்றம் தொற்றிக்கொண்டது. அண்ணாவின் உயிர் இறுதி முடிவெடுவு எடுத்துவிட்டது.

1969 பிப்ரவரி 2, இரவு 12.30 மணிக்கு வானொலி கண்ணீர் வடித்தது. உயிர் காற்றில் கலந்துவிட்டது. தமிழகமே கதறியது. அண்ணா மறைந்தார்.

Comment here