இந்தியா

அதிரப்பள்ளி அருவி

பெயரைச் சொல்லும்போதே அதிரவைக்கும் ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சிதான் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. பார்ப்பதற்கு நயாகராவின் குட்டி வடிவம் போன்றே காட்சியளிப்பதால் ‘இந்தியாவின் நயாகரா’ என்றும் அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடிவரும் சாலக்குடி ஆற்றின் பாதையில், இந்த அற்புத நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது. 24 மீட்டர் (82 அடி) உயரத்திலிருந்து, நான்கு பிரிவுகளாக இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. 100 மீட்டர் (330 அடி) அகலத்தைக் கொண்டுள்ளதால் மெய்சிலிர்க்க வைக்கும் பிரம்மாண்ட தோற்றத்துடன் இந்த நீர்வீழ்ச்சி நம்மை முதல் பார்வையிலேயே திகைக்கவைத்துவிடுகிறது. நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு தளங்களிலிருந்து வெவ்வேறு கோணத்தில் இதன் அழகை ரசிக்கலாம்.

நீர்வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் பாதையிலிருந்து பார்க்கும்போதே, நீர்வீழ்ச்சியின் முன்புறத் தோற்றமும் கீழே ஆழத்தில் ஓடும் ஆறும் காட்சியளிக்கின்றன. பாறைகளில் வழிந்து சிதறும் வெண்ணிறப் பரப்பு நீரா, புகையா, மேகமா, பஞ்சுப் பொதியா என்றெல்லாம் நம்மை மனம் தடுமாற வைக்கும் அமானுஷ்யத்துடன், பிரதேசம் முழுதும் எதிரொலிக்கும் ஓசையுடன் இந்த நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதுதான் இயற்கையின் குரலா என்றுகூட நீங்கள் வியக்கக்கூடும். உச்சியிலிருந்தும் இந்த நீர்வீழ்ச்சியைப் பார்த்து ரசிக்கலாம். இதற்கு நீங்கள் ஒரு அனுமதிச் சீட்டு வாங்கி, பிரதான வாசல் வழியாக நுழைய வேண்டியுள்ளது. இந்த அற்புத நீர்வீழ்ச்சிக்கு யாவருமே வாழ்வில் ஒரு முறையாவது சென்று ரசிப்பது அவசியம்.

Comment here