தொழில்நுட்பம்

அதி நவீன கம்ப்யூட்டர் மெமரி கார்டு

இன்றைய தேதியில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும், வாட்ஸ் ஆப் மற்றும் யூ டியூப் போன்ற ‘ஆப்’களும்தான் அனைத்துத் தரப்பு மக்களையும் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன. ஆனால் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்ட இந்த இணையத்தளங்கள் அத்தனைபேரின் புகைப்படம் மற்றும் பதிவுகள் உள்ளிட்ட கோடிக்கணக்கான தகவல்களையும் சேமித்து வைத்தால்தான் பொதுமக்கள் தொடர்ந்து அந்த தளங்களை பயன்படுத்துவார்கள்.

ஆனால் எவ்வளவு தகவல்களை சேமித்து வைத்தாலும், பொதுமக்கள் தொடர்ந்து தகவல்களை தரவேற்றிகொண்டேதான் இருக்கிறார்கள். அதன் விளைவாக, தற்போதைய தகவல் சேமிப்பு கருவிகளான (data storage devices) ஹார்டு டிரைவ் மற்றும் மெமரி கார்டு அல்லது ஸ்டிக்குகள் ஆகியவை மெகா பைட்டில் ஆரம்பித்து தற்போது டெர்ரா பைட் (ஆயிரம் கோடி பைட் தகவல்கள்) தாண்டி வளர்ந்துகொண்டே இருக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இத்தனை ஆயிரம் கோடி தகவல்களையும் தொடர்ந்து சேமித்து வைக்க வேண்டுமானால் அதற்கு பல மடங்கு ஆற்றல் தேவை. ஆனால் நம்மிடம் அவ்வளவு ஆற்றலை உற்பத்தி செய்யும் வசதி இல்லை. ஆகவே, குறைந்த ஆற்றலை பயன்படுத்தி மிக அதிகமான தகவல்களை சேமித்து வைக்கும் நினைவுத்திறன் (மெமரி) கருவிகளை உருவாக்கும் முயற்சி உலகெங்கும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

அத்தகைய முயற்சிகளின் பலனாக விஞ்ஞானிகள் ‘பிரபஞ்ச நினைவுத்திறன்’ (Universal memory) எனும் ஒரு நவீன மின்னணு நினைவுத்திறன்கொண்ட ஒரு தொடக்கநிலை கருவி (electronic memory cell) ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள லான்காஸ்டர் யுனிவெர்சிட்டியைச் சேர்ந்த இயற்பியலாளர் மேநஸ் ஹெய்ன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ள இந்த கருவியானது குவாண்டம் மெக்கானிக்ஸ் அடிப்படையில் இயங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கருவி மூலமாக ஆற்றல் செயல்திறன் (அதாவது குறைந்த ஆற்றல் மிக அதிகமான வேலைகளை முடிப்பது) என்பது மேம்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபஞ்ச நினைவுத்திறன் கொண்ட கருவிகளைப் பயன்படுத்தினால், தகவல்களை சுலபமாக மாற்றிக்கொள்ளக் கூடிய வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. தொடக்ககாலத்தில் இத்தகைய கருவியை உருவாக்குவது என்பது முற்றிலும் நடக்காத காரியம் என்றார்கள் பல விஞ்ஞானிகள். ஆனால் இன்று, அத்தகைய ஒரு அட்டகாசமான கருவியை உருவாக்கி அசத்தியிருக்கிறது மேனஸ் ஹெய்ன் தலைமையிலான ஆய்வுக்குழு.

சமகால அல்லது தற்போதைய கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் தகவல் மையங்கள் ஆகியவை அனைத்தும் இரண்டு வகையான நினைவுத்திறன்களை பயன்படுத்தி வருகின்றன. ஒன்று, ரேம் அல்லது ரேன்டம் ஆக்சஸ் மெமரி (RAM/Random access memory). இது, ஒரு கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போனில் திறந்து வைத்திருக்கும் பைல்கள் மற்றும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற ஆப்களின் தகவல்களையும் சேமித்து வைக்கும். அதுமட்டுமல்லாமல், கேட்டவுடன் அவற்றை உடனே நமக்கு காண்பிக்கும் திறன்கொண்டது மற்றும் குறைவான ஆற்றலை பயன்படுத்துவது. ஆனால், ரேம்-ல் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டால், நம் தகவல்கள் அனைத்தும் காணாமல் போய்விடும்.

அடுத்ததாக, தற்போது பெரும்பாலும் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் டைனமிக் ரேம் (டி-ரேம்) (Dynamic RAM/DRAM) மற்றும் சிறிய அளவில் ஸ்டாடிக் ரேம் (Static RAM/SRAM) ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர, நம் டிஜிட்டல் தகவல்களை நீண்ட காலம் சேமித்து பாதுகாக்கும் நினைவுத்திறன் கருவியான ப்ளாஷ் ஸ்டோரேஜ் (flash storage) என்பதும் பயன்பாட்டில் உள்ளது. ப்ளாஷ் ஸ்டோரேஜ் அதிக ஆற்றலை பயன்படுத்தக்கூடியது மற்றும் மிகவும் தாமதமாக இயங்கக்கூடியது.

இந்த புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரபஞ்ச நினைவுத்திறன் கருவியானது ரேம் (RAM) மற்றும் ப்ளாஷ் ஸ்டோரேஜ் ஆகிய இரண்டிலும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து ஒன்றாக சேர்த்தது போல இருக்கிறது என்கிறார் விஞ்ஞானி மேனஸ் ஹெய்ன். மேலும் இந்தக்கருவியானது நம் பிரபஞ்சத்தின் வயதைத் தாண்டிய காலம் வரை செயல்படும் அசுரத் திறன்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதவிர, இந்த கருவி மூலமாக, டேட்டா சென்டர், தகவல் சேமிப்பு மையம் ஆகியவற்றின் ஆற்றல் பயன்பாடு வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தத்தில், தற்போது தொடக்கநிலையில் உள்ள இந்த பிரபஞ்ச நினைவுத்திறன் கருவியானது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்முன்பு பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களின் டேட்டா சென்டர்களில் பயன்படும் என்றும், அதனைத் தொடர்ந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரலாம் என்றும் கூறுகிறார் இயற்பியலாளர் மேனஸ் ஹெய்ன்.

Comment here