அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை, வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாகப் பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி !

5 (100%) 1 vote

ராமேஸ்வரம் அருகே அமைந்துள்ள மறைந்த டாக்டர் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை, வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாகப் பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

டாக்டர் அப்துல்கலாம், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் உயிரிழந்தார். அதன்பின், அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின் ராமேஸ்வரம் அருகேயுள்ள பேக்கரும்பு எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவரது நினைவாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ‘அப்துல் கலாம் தேசிய நினைவகம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதை, கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு தினமான கடந்த ஜூலை 27-ல் பிரதமர் மோடி திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள், மாணவ மாணவிகள், வெளிநாட்டினர் இந்த நினைவகத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்த நினைவகத்தின் உள்ளே, கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள், புகைப்படங்கள், சிற்பங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், கண்டுபிடித்த மாதிரிகள் என எண்ணற்ற பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன், நினைவகத்தின் நுழைவுப் பகுதியில் கலாம் வீணை வாசித்தபடி அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலையும் உள்ளது.

முழுமையாகப் பணிகள் முடியாத நிலையில் கலாம் நினைவிடத்தின் 4 பக்கங்களிலும் உள்ள காட்சிக் கூடங்களுக்குள் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. இந்தக் காட்சிக் கூடங்களில், கலாமின் அரியப் புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவச் சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் அங்குத் தொடர்ந்து நடந்துவந்தன. தற்போது இந்தப் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இதையடுத்து, வரும் ஜனவரி மாதம் முதல் டாக்டர் அப்துல் கலாம் நினைவகத்தை முழுமையாகப் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*