இயல்தமிழ்

அப்பர் தேவாரம்

Rate this post

குறிப்பு: *”நினைத்து தொழுவார் பாவந் தீர்க்கும் நிமலர் உறைகோயில் – திருவண்ணாமலை”*

திருக்கயிலை மலையில் ஓர் மண்டபத்தில் வீற்றிருந்த ஆதிகுருநாதராம் நந்தியெம் பெருமானிடம் உரோமசர் முதலிய முனிவர்களில் சிறந்தவரான “மார்கண்டேயர்” எழுந்து குருநாதரிடம், *”உலகில் முத்திக்குரிய சிவதலங்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றிற்கு செல்வதும் சேர்வதும் மனிதரல்லாத மற்றைய உயிர்களுக்கும் மனிதர்களிலேயே தாழ்வு நிலையில் இருப்பவரும் பிணிவாய்பட்டவரும் என்ற இவர்களுக்கும் முத்திக்கு வித்திடும் க்ஷேத்திரம் உண்டா??”* என்று கேட்ட பொழுது, நந்தியெம் பெருமான் அப்படி ஒரு நகரம் இருக்கிறது,

*”சத்தியம்தாம் மொழிவன் முத்திதரும் ஊர் அது, தேசுநகர் என்று பெயர், தென்னருணை என்று பெயர், சீர்வைத்த சிவலோகநகர் என்றுபெயர், நீடுசதுர் வாயுநகர் என்று பெயர், முத்திநகர் என்றுபெயர், ஞானநகர் என்றுபெயர், முந்தி அதலேச்சுரம் எனும் சுத்தநகர் என்றுபெயர், தென்கயிலை என்றுபெயர், சோணகிரி என்றுபெயர்”* என்று கூறி அந்நகரம் என்றும் இயற்கை சீற்றங்களுக்கு உட்படாதது, இன்னபிற உலகியல் துன்பங்கள் யாவும் அங்கு உள்ளவர்களை சேராது என்பதனை

*”வாதம்மிகு காலம், அழல், ஊழியலை, ஏழுபுயல் வாதைபுரியாத நகரம் சீதம் முதல் ஆனபிணி, தீமை, இடையூறு, பசி சேரவரிதான நகரம் மாதவர்கள் மாதவர்கள் பூசைபுரி மாநகரம்”* என்று கூறி அத்தலத்தில்

ஒரு மலை இருப்பதாகவும் அது சத்திய யுகத்தில் தீமலையாகவும் திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாபரத்தில் பொன்மலையாகவும் கலியுகத்தில் கல் மலையாகவும் இருந்தது என்று கூறி *”அதன் பெயர் அருணபூதரம்”* என்கின்றார்.🙏🏻

*”அப்பதி தமிழ்நாட்டு உள்ளது முப்பது மூன்று கோடி தேவர்களும் தவம் செய்வர் அதற்கோர் ஒப்பு வேறில்லை இம்பர் நாட்டு இடத்தும் உம்பர் நாட்டு இடத்தும்”* என்று உரை செய்தனர் நந்தி எம்பெருமான்

பிறக்க இறக்க முத்தி தரும் தலங்கள் இருந்தாலும் பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை, தரிசிக்க முத்தி தரும் தன்னேரில்லாத தில்லையை உரிய பிறப்பில்லாதார் தரிசிக்க இயலாது எனில் அனைத்து பிறப்புக்கும் முத்தி தரும் தலம் யாது?? என்று முனிவர்கள் கேட்டபொழுது *”குண்டகர் பதிதர் கோளகர் புலையர் கொலையினர் உறுப்பினில் குறைந்தோர் கண்டகர் நெடுந்தூரத்தி்னில் இருப்போர் கருணைசேர் அருண பூதரத்தை எண்தக ஒருகால் நினைத்திட முத்தி”* என்று கூறிய ஆதிகுரவர் *”விலங்கு புள் மரங்கள் முண்டகம் முதலாயினவும் முன் காண முளைத்திட முத்தியே பெறுமால்”* என்ற நந்தியெம்பெருமான் முத்திக்கு வழி கூறியதாக அருணாசல புராணம் கூறுகிறது

கொலை, களவு, பொய், பிறன்மனைவிழைவு, குருத்துரோகம் என்னும் பஞ்சமா பாதகங்களையும் திருவண்ணாமலையில் போய் செய்வேன் என்று ஒருவன் நினைத்தாலும் அப்போது திருவண்ணாமலை என்று மனதில் நினைத்ததால் அவனது பாவங்கள் தீர்க்கப் படும் என்பதனை *”பஞ்ச பாதகம் ஒருவன் அப்பதியிலே பண்ண நெஞ்சினால் நினைத்திடுகினும் நினைத்ததே பரமாய்த் தஞ்சம் ஆகிய முத்தியாம்”* என்கிறது புராணம்

அதனால்தான் *”நினைத்து தொழுவார் பாவந் தீர்க்கும் நிமலர் உறைகோயில்”* என்று தம் பதிகத்தில் போற்றி மகிழ்கிறார் பிள்ளைப் பெருமானார்

திருப்பைஞீலி முதலான தலங்களை வணங்கி கொண்டு *”மாதொர் பாகர் அருளாலே வடபால் நோக்கிய வாகீசர் ஆதிதேவர் அமர்ந்த திருவண்ணாமலையை நண்ணினார்”* என்பது சேக்கிழார் பெருமான் வாக்கு

அப்பரடிகள் கிரிவலம் செய்து அண்ணாமலையின் மீது ஏறி அங்கிருந்த அண்ணாமலையார் கோயிலை தரிசனம் செய்தனர் எனபதனை *”செங்கண் விடையார் திருவண்ணா மலையைத் தொழுது வலங்கொண்டு துங்க வரையின் மிசையேறித் தொண்டர் தொழும்புக்கு எதிர்நின்று அங்கண் அரசை தொழுது எழுந்து”* என்ற பெரியபுராண வரிகளால் அறியலாம்

*”அண்ணா மலைமல் அணிமலையை ஆராவன்பின் அடியவர்தம் கண்ணார் அமுதை, விண்ணோரைக் காக்க கடலில் வந்து எழுந்த உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகும் சிந்தை உடன் பண்ணார் பதிகத் தமிழ்பாடிப் பணிந்து பரவிப் பணிசெய்தார்”* அப்பரடிகள் என்பது செல்வமலி குன்றத்தூர் தெய்வச்சேக்கிழர் பெருமான் வாக்கு

அப்படி அப்பரடிகள் பாடிய பண்ணார் பதிகத் தமிழ்களில் ஒன்று *”ஓதி மாமலர் தூவி”* என்னும் திருநேரிசையாம்

அற்புதமான சந்த மலர்களால் நம் ஊணும் உயிரும் உருகும் வண்ணமாய் அப்பரடிகள் கோத்தளித்த அத்திருநேரிசையின் முதல் மூன்று பாடல்கள் இவை

*பாடல்*

ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க

சோதியே துளங்கும் எண்டோட் சுடர்மழுப் படையி னானே

ஆதியே அமரர் கோவே அணியணா மலையுளானே

நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவிலேனே.

பண்டனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீல

கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா

அண்டனே அமரர் கோவே அணியணா மலை உளானே

தொண்டனேன் உன்னை யல்லாற் சொல்லுமா சொல்லிலேனே.

உருவமும் உயிருமாகி ஓதிய உலகுக்கெல்லாம்

பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க

அருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர் கோவே

மருவிநின் பாதம் அல்லால் மற்றொரும் ஆடிலேனே.

*பொருள்*

பார்வதிபாகனே ! மேம்பட்ட சோதியே ! கூத்தினிடத்தே அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே ! மழுப் படையை ஏந்தியவனே ! ஆதியே ! தேவர்கட்குத்தலைவனே ! அழகிய அண்ணாமலையில் இருப்பவனே ! உன் திருநாமங்களை ஓதிச் சிறந்த மலர்களை அர்ப்பணித்து முறைப்படி உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்றும் பொருள்களை ஊன்றி நினையேன்

பண்ணை வென்ற இனிய சொல்லையுடைய பார்வதிபாகனே ! நீலகண்டனே ! கார்காலத்தில் மலரும் கொன்றைப் பூவை அணிந்த கடவுளே ! தாமரை போன்ற திருவடிகளை உடையவனே ! தேவனே ! தேவர்கள் தலைவனே ! அழகிய அண்ணா மலையில் உள்ளவனே ! அடியவனாகிய யான் உன்னைத் தவிரப் பிறரை உயர்த்திச் சொல்லும் சொற்களைச் சொல்லுவேன் அல்லேன்

சடமாகிய மாயையாகவும் , சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய் , குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூல கருமமும் பிறப்பும் பிறப்பிலிருந்து விடுதலையுமாய் நின்ற எம் பெருமானே ! நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர் தலைவனே ! உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றைத் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன் .

*சிவதீபன்*

Comment here