அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சோழர் கால சிலைகள் மீட்பு : அரசு அதிகாரிகள் அதிரடி

Rate this post

தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்பிலான சோழர் காலத்து சிலைகள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்தியாவை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருந்து ஏராளமான பாரம்பரிய சிலைகள் பல ஆண்டுகளாக கடத்தப்பட்டு வந்துள்ளது. இதில், சோழர் காலத்து மதிப்புமிக்க சிலைகள் பல கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் துரித நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் 7 ஆயிரம் சிலைகள் காணாமல் போயுள்ளன என்று கண்டறியப்பட்டு, அதனை மீட்கும் பணி வேகமெடுத்துள்ளன. இதில், அமெரிக்காவில் அலபமாவில் உள்ள பிர்மிங்காம் அருங்காட்சியகத்தில் கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட லிங்கோத்பவமூர்த்தி சிலை வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்தச் சிலை 12-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தது. தமிழகத்தில் இருந்து இந்த சிலை அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு, அங்கு பல பேரிடம் கைமாறி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையின் இந்திய ரூபாய் மதிப்பு 1 கோடியே 62 லட்சம் ரூபாய். இதேபோல, வட மாநிலங்களில் வழிபடப்படும் கையில் வாளுடன் இருக்கும் ‘மஞ்சு’ சிலையும் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிலையும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது பீகார் மாநிலம், புத்தகயா அருகே உள்ள கோயில் ஒன்றில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 1 கோடியே 98 லட்சம் ரூபாய்.

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட இந்த சிலைகள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். அதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன. இதையடுத்து, அமெரிக்க அதிகாரிகள் அந்த சிலையின் உரிமையாளர்களிடம் தகவல் தெரிவித்து அந்த சிலைகளை மீட்டனர். இரண்டு சிலைகளையும் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர். அந்த சிலைகள் இந்தியாவுக்கு கொண்டுவரம் பணிகளை அரசு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*