அயர்லாந்தில் சட்டப்பூர்வ கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 70 சதவீதம் பேர் வாக்கு!

Rate this post

உலகமெங்கும் குழந்தை பிறப்பு அதிகரித்து கொண்டே போகும் நிலையில் பல நாடுகள் சட்டப்பூர்வ கருக் கலைப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப் படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. அதே சமயம் கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளியை சேர்ந்த பல் மருத்துவர் சவிதா என்பவர் 2012-ம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த விவகாரம் அயர்லாந்து மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மேலும், கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்ற அரசு முன்வந்தது.

அதன்படி, கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தினை அறியும் வகையில் நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் 6500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதற்கிடையே, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

எனவே, பொதுவாக்கெடுப்பின் முடிவுகள், கடுமையான கருக்கலைப்பு தடைச் சட்டத்தை ரத்து செய்ய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் எட்டாவது சட்டதிருத்தத்தை ஆதரித்து பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளதை அமைதி புரட்சி என அயர்லாந்து நாட்டின் பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வர்ட்க்கர் குறிப்பிட்டுள்ளார்.

எட்டாவது சட்டதிருத்ததுக்கு எதிராக மக்கள் தங்களது உணர்வுகளை வாக்குகளின் வழியாக பிரதிபலித்துள்ளனர். அந்த முடிவுகள் அபாரமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*