தமிழகம்

அரசு ஊழியர்களின் பதவி உயர்வு, பணி நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்டவை லோக் ஆயுக்தா அமைப்பிற்குள் வர வேண்டும் – கு.பாலசுப்பிரமணியன்

Rate this post

அரசு ஊழியர்களின் பதவி உயர்வு, பணி நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்டவை லோக் ஆயுக்தா அமைப்பிற்குள் வர வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் சிதம்பரத்தில் பேட்டி.

இந்த அமைப்பு நீதித்துறை சார்ந்த அமைப்பாக உருவாக வேண்டும் எனவும் வலியுறுத்தல்.
தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு அதிகாரம் இல்லாத அமைப்பு என்றும், இதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகிறது. மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே இந்த அமைப்பை செயல்படுத்த வேண்டும் என சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் திரு. கு.பாலசுப்பிரமணியன் இன்று சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லோக் ஆயுக்தா அமைப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறிய அவர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா மசோதாவில் அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை அவர்களது பதவி உயர்வு, பணியிட மாற்றம், பணி நியமனம் உள்ளிட்டவை அந்த லோக் ஆயுக்தா வரம்பிற்குள் வராது என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 அம்சங்களும் லோக் ஆயுக்தா வரம்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் அந்த அமைப்பின் நோக்கம் நிறைவேறும் எனவும் கூறிய அவர், அரசு ஊழியர்கள் தொடர்பான பிரச்சினைகளை உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதற்கு வாய்ப்பு இருந்தாலும், அங்கு தேங்கி உள்ள பல ஆயிரக்கணக்கான வழக்குகளினால் விரைந்து தீர்க்கப்படும் சூழல் இல்லை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு ஊழியர்களின் இதுபோன்ற வழக்குகளையும் லோக் ஆயுக்தாவே விசாரிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு இந்த 3 அம்சங்களையும் அதில் சேர்க்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், இந்த அமைப்பு முற்றிலும் நீதித்துறை சார்ந்த அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கேற்ப தமிழக அரசு இந்த லோக் ஆயுக்தாவை உருவாக்க வேண்டும்
எனவும் பாலசுப்பிரமணியன் கூறினார்.

Comment here