இந்தியா

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் மே 19-ந் தேதி இடைத்தேர்தல்

புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் தேதி, கடந்த மாதம் 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
வழக்குகள்
அப்போது, தமிழ்நாட்டில் 21 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, மேற்கண்ட 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுடன் 18 தொகுதிகளிலும் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அந்த தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறியது. அதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. 18 தொகுதிகளுடன் சேர்த்து 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தின.
இதே கோரிக்கையுடன் தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது.
எம்.எல்.ஏ. மரணம்
இதற்கிடையே, சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ், கடந்த மாதம் 21-ந் தேதி மாரடைப்பால் காலமானார். அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே, இடைத்தேர்தல் நடத்த வேண்டிய காலியிடங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
சமீபத்தில், தேர்தல் கமிஷனர்கள் சென்னைக்கு வந்தனர். அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டனர். அப்போது, 4 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, இடைத்தேர்தல் நடத்த முட்டுக்கட்டையாக இருந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. இதனால், இடைத்தேர்தல் நடத்த தயார் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
இடைத்தேர்தல் அறிவிப்பு
இந்த நிலையில், காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் கமிஷன் நேற்று இடைத்தேர்தல் அறிவித்தது. மே 19-ந் தேதி, இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம்தான், நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட 4 தொகுதிகளிலும், இம்மாதம் 22-ந் தேதி (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 29-ந் தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.
வேட்புமனுக்கள் பரிசீலனை 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற மே 2-ந் தேதி (வியாழக்கிழமை) கடைசி நாள். மே 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ந் தேதி நடக்கிறது.
எனவே, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.
நடத்தை விதிமுறைகள்
தேர்தல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உள்ளூர் பண்டிகைகள், வாக்காளர் பட்டியல் தயார்நிலை, வானிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிசீலித்த பிறகு, இந்த இடைத்தேர்தல் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு எந்திரங்களை பயன்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற் காக போதுமான எந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன. இடைத்தேர்தல் சுமுகமாக நடப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டபடி, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அல்லது இதர ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக, ஏற்கனவே மேற்கண்ட தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் முடிந்தாலும், இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீடிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4 தொகுதிகளுடன், கர்நாடக மாநிலம் குண்டகோல், கோவா மாநிலம் பனாஜி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் மே 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
கோவா முதல்-மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த மாதம் 17-ந் தேதி காலமானதால் அவரது தொகுதியான பனாஜியில், இடைத்தேர்தல் நடக்கிறது.
அ.தி.மு.க. கைவசம்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களாக இருந்த செந்தில் பாலாஜி, சுந்தர்ராஜ் ஆகியோர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்கின்றன.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஏ.கே.போஸ், கனகராஜ் ஆகியோர் காலமானதால், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. 4 தொகுதிகளும் அ.தி.மு.க. கைவசம் இருந்த தொகுதிகள் ஆகும்.
முக்கியத்துவம்
சட்டசபையில் காலியிடங்கள் இருந்ததால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு பெரும்பான்மை இருந்தது. இடைத்தேர்தல் மூலம் இந்த காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான், அரசுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கும். எனவே, இந்த தேர்தல் அ.தி.மு.க. அரசுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Comment here