வரலாறு

அரியலூர் படுகையில் கரம்பியம்

தமிழகத்தில் தொல்லுயிர் எச்சங்கள் – பகுதி 2
(FOSSILS IN TAMIL NADU)

அளவில் பெரிய அம்மோனைட்கள், ‘’GIANT AMMONITES” என்று அழைக்கப்படுகின்றன. அரியலூர் படுகையில் கரம்பியம் போன்ற பகுதிகளில் இன்றும் இவை கிடைக்கின்றன. திருச்சி தேசிய கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அழகப்பாப் பல்கலைக்கழகம், கோவை விவசாயக் கல்லூரி போன்ற கல்வி நிலையங்களில் உள்ள புவியியல் துறைகள், மற்றும் சென்னையிலுள்ள இந்திய புவியியல் ஆய்வுத் துறை, மாநில புவியியல் ஆய்வுத் துறை ஆகியவற்றின் அருங்காட்சியகங்களில் ‘’GIANT AMMONITES “ காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொல்காலத்தில் இருந்த உயிரினங்களில் பல இன்று இல்லை. இன்றுள்ள உயிரினங்களில் பல தொல்காலத்தில் தோன்றவில்லை எனும் உயிரியல் உண்மைகளை ஃபாசில்கள் நமக்கு உணர்த்துகின்றன.

பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின் ஒரு தொல்லுயிரியல் ஆர்வலர். அவரின் கோட்பாடு உருவாவதற்கு அவர் கண்டறிந்த ஃபாசில்கள் மிக முக்கிய காரணமாக இருந்தன என்றால் அது மிகையாகாது.

துவக்க காலத்தில் உருவாகிய படிவப் பாறைகளில் அதிக வளர்ச்சி (less evolved) யடையாத உயிரினங்களின் ஃபாசில்கள் இருப்பதும், பின் தோன்றிய பாறைகளில் படிப்படியாக வளர்ச்சி அடைந்த உயிரினங்களின் ஃபாசில்கள் கிடைப்பதும், பரிணாம வளச்சிக்கு சான்றாக அமைகின்றன.

தொல்காலத்தில் இருந்த பூகோள அமைப்பு வேறு, இன்றுள்ள பூகோள அமைப்பு வேறு. நிலங்கள் இருந்த பகுதி கடலாக மாறியுள்ளது. பெருங்கடல்கள் இருந்த பகுதிகள் உயர்ந்த மலைகளாக மாறியுள்ளன. மாற்றம் ஒன்றுதானே மாறாதது.

நம் அரியலூர் படுகையையே எடுத்துக் கொள்வோம். இன்றைக்குக் கடற்கரையிலிருந்து நூறு கி.மீ. மேற்கே அமைந்துள்ள பகுதிகளில் இன்றைக்குக் கிரிடேஷியஸ் காலத்தில் வாழ்ந்த கடல் வாழ் உயிரினங்களின் ஃபாசில்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் இந்தப் பகுதிகள் அப்போது கடலின் கீழ் இருந்தன என்பது தெளிவாகிறது.

வரலாற்று ஆசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் கூறும் கடல்கோள் இதுதான் என எண்ணி குழப்பிக் கொள்ளக்கூடாது. வரலாற்றுத் தொன்மை என்பது சில ஆயிரம் ஆண்டுகளே. புவியியல் தொன்மை என்பது பல இலட்சம் ஆண்டுகள். மேலும், கிரிடேஷியஸ் காலத்தில் இந்தியத் துணைக் கண்டம், நிலநடுக்கோட்டிற்கு தெற்கே வெகு தூரத்தில் இருந்தது, அப்போது மனித இனமே தோன்றவில்லை போன்ற அறிவியல் உண்மைகளையும் மனதிற் கொள்ள வேண்டும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன், பணியில் சேர்ந்த புதிதில் காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் எங்களுக்குக் களப்பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, நாங்கள் முகாமிட்டிருந்த பஹல்காம் பள்ளத்தாக்கிலிருந்து (தேன் நிலவு திரைப்படததின் ‘பாட்டுப் பாட வா“ பாடல் இங்கேதான் படமாக்கப்பட்டது) அமர்நாத் குகைக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. வழியில் ‘மஹாகுனுஸ் டாப்’ எனும் இயற்கை எழில் நிறைந்த ஓர் இடம். கடல் மட்டத்திலிருந்து 4200 மீ. உயரத்தில் உள்ள இந்த இடம்தான் அமர்நாத் செல்லும் வழியில் நாம் கடக்கும் மிக உயரமான இடம் இந்த இடத்தில் சற்று இளைப்பாறினோம்.. அவ்வளவாக வெண்பனி (SNOW) இல்லை.

கையில் வைத்திருந்த சுத்தியலால் மண்ணை கீறிக் கொண்டிருந்தேன். அப்போது ஃபாசில்கள் வெளிப்பட்டன. RHYNCHONELLA எனும் கடல் வாழ் சிப்பியின் ஃபாசில். என்னுள் மகிழ்ச்சி வெள்ளம் பிரவாகம் எடுத்தது. இமயத்தில் கடவாழ் உயிரினங்களின் ஃபாசில்கள் இருப்பது பற்றி கல்லூரிக் காலத்தில் படித்ததுண்டு. ஆனாலும் 4200 மீ. உயரத்தில் என் கையால் நோண்டி கடல் வாழ் உயிரினங்களின் ஃபாசில்களைக் கண்டபோது, அந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

பின் வந்த நாட்களில், CAMBRIAN காலம் முதல் TERTIARY காலம் வரையிலான ஃபாசில்கள் பல இமயத்தில் உள்ளதைக் கண்டறிந்தோம். தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கு முன், பூட்டான் மற்றும் சிக்கிமில் களப்பணி பணியாற்றும் வாய்ப்பு கிட்டியபோது போது, பலவேறு காலத்தைச் சேர்ந்த பல வேறு ஃபாசில்களைக் கண்டு மகிழ்ந்தேன்.

தமிழகக் கடற்கரையை சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து, பல்வேறு வதந்திகள் பரவின. அப்போது, அடையாறு தமிழ் சங்கத்தில், ஒய்வு பெற்ற வரலாற்றியல் பேராசிரியர் ஒருவர் பேசும்போது, “அந்தக் காலத்திலும் சுனாமி வந்திருக்கிறது, அப்போது கடல் இமயமலையில் ஏறிப் பரந்திருக்கிறது, அங்கு கிடைக்கும் கடல்வாழ் உயிரினங்களின் எலும்புகளே இதற்கு சான்று” என்றார். அதிர்ந்து போனேன். எழுந்து அரைமணி நேரத்திற்கு விளக்கம் அளித்தேன்.
(தொடர்ந்து பேசுவோம்)
இமயமலை பாசில்கள் பற்றிய ஒரு சிறு விழியம். இணையத்திலிருந்து.

Comment here