தமிழகம்

அரியலூர் படுகையில் தொல் இலைப் படிவங்கள்

             தமிழகத்தின் கிழக்குப் பகுதியில், வடக்கே ஆந்திர எல்லையில் தொடங்கி தெற்கில் மணிமுத்தாறு – வெள்ளாறு (விருதாச்சலம்) வரை உள்ள படிவப்பாறைகள் பற்றியும் அவற்றில் கிடைக்கும் ஃபாசில்கள் பற்றியும் கடந்த 12 பகுதிகளில் பார்த்தோம்.. இனி வெள்ளாற்றைக் கடந்துத் தெற்கே செல்வோம்.

வெள்ளாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையேதான் உலகப் புகழ் பெற்ற “அரியலூர் படிவப் பாறைகள்” காணக் கிடைகின்றன. கோண்டுவானா காலத்தில், இந்திய தீபகற்பத்தின் கிழக்குப் பகுதி அண்டார்டிக்காவிலிருந்து பிரிந்த போது ஏற்பட்ட இழுவிசையின் (TENSION) காரணமாக, இன்றைய காவிரிக்கும், பாலாற்றிற்கும் இடையே வடகிழக்கு – தென்மேற்கு திசையில் பிறழ்வுகள் (Fault) ஏற்பட்டு, அதன் விளைவாக பெரும் பிளவுப் பள்ளங்களும் (H0rst and Graben) அவற்றில் நீர்நிலைகளும் உருவாகியிருக்கவேண்டும். இவற்றில் உருவானப் படிவப்பாறைகள் சில நூறு கி.மீ. நீளத்திற்கும் பல நூறு மீ. அகலத்திற்கும் இன்றும் காணக் கிடைக்கின்றன. இடையிடையே தென்பெண்ணை, வெள்ளாறு ஆகிய ஆறுகளின் வண்டல்கள் இவற்றை மூடி விடுவதால் இவை இன்று, புதுச்சேரி படிவப்பாறைகள். விருத்தாசலம் படிவப்பாறைகள், அரியலூர் படிவப்பாறைகள் எனப் பிரித்து அறியப்படுகின்றன.

இவை அனைத்திலுமே கடல்வாழ் உயிரங்களின் ஃபாசில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய புவியியல் ஆய்வுத்துறை (Geological Survey of India) வெளியிட்டுள்ள புவியியல் வரைபடத்தில் இந்தப் படிவப் பாறைகள் நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. இவற்றை நான் நீள் வட்டங்களின் உள்ளே காட்டியிருக்கிறேன்.

பெரம்பலூருக்கு சில கி.மீ. முன்பும் பின்பும், சென்னை – திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து கிழக்கே செல்லும் சாலைகளில் சென்றால், அரியலூர் படுகையிலுள்ள படிவப்பாறைகளையும் அவற்றில் பதிந்துள்ள பாசில்களையும் காண இயலும். நாம் பெரம்பலூருக்குத் தெற்கே ஈரூர் எனும் இடத்திலிருந்து பிரிந்து அரியலூர் செல்லும் சாலையில் பயணிக்கலாம், வாருங்கள். இந்த சாலையில் சுமார் ஐந்து கி.மீ. பயனித்த பின் காரை எனும் கிராமத்தை அடைகிறோம். வழி நெடுகிலும் சாலையின் மருங்கே, சார்னகைட் (Charnockite) எனப்படும் உருமாற்றுப் பாறைகளே தென்படுகின்றன.

காரை கிராமத்தை ஒட்டிய, கிழக்குப பகுதியில், புவியியல் அமைப்பில் மாற்றம் தெரிகிறது. ஆம், இங்கிருந்து கிழக்கே பல கி.மீ. தூரத்திற்கு படிவப் பாறைகளே கிடைகின்றன. காரை கிராமத்திற்கும், இதன் தெற்கே அமைந்துள்ள தரணி எனும் கிராமத்திற்கும் இடையே வடக்கு – தெற்காக நிறைய களிமண் குவாரிகள் உள்ளன .இந்தப் பகுதியில் உள்ள களிமண் பாறைகளில் எந்தவித கடல் வாழ் உயிரினங்களின் ஃபாசிலும் இல்லை. மாறாக, இலை ஃபாசில்கள் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றன. இவை, சென்னைக்கு அருகே திருப்பெரும்புதூர், மணிமங்கலம், குண்டுப்பெரும்பேடு பகுதிகளில் கிடைக்கும் இலை ஃபாசில்களை ஒத்துள்ளன. இவைகளில் பெரும்பாலானவை டிலோஃபில்லம் எனும் தாவரத்தின் இலைகள். இவற்றின் அடிப்படையில் இந்த களிமண் பாறைகள் கோண்டுவானா காலத்தில் உருவானவை என அறிய முடிகிறது.

பாண்டிச்சேரி பகுதியிலும், விருத்தாசலம் பகுதியிலும் கோண்டுவானா பாறைகளோ பாசில்களோ இல்லை என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன் விருதாச்சலம் பகுதியில் சுண்ணாம்புக்கல் படிவங்களை கண்டறிய ஜி.எஸ்.ஐ. நடத்திய ஆய்வின் போது கடல் பாசில்கள் தாங்கிய கிரிடேஷியஸ் படிவங்களின் கீழே டிலோஃபில்லம் இலை பாசில்களடங்கிய கோண்டுவானாப் பாறைகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

Comment here