கதை

அரிவட்டாய நாயனார்

கணமங்கலம் எனும் ஊரில் பிறந்த வேளான் தொழில் செய்துவந்த அடியார் தாயனார்.நீர் வளம் நில வளம் மிக்க நாடு அடியாரின் நாடு.மக்கள் யாதொரு குறையுமின்றி வாழ்ந்து வந்தனர்.இதற்கு காரணம் ஐயன் ஈசனே என்று கருதிய அடியார் ஈசன்மீது அன்பொழுக செந்நெல் அரிசியை சமைத்து அதற்கு கீரையையும் சமைத்து அதனுடன் மாவடுவையும் சேர்த்து ஈசனது நிவேதனத்திற்கு அனுதினமும் வழங்கி வந்தருளினார். வளமோடும் நலமோடும் வாழ்ந்த தாயனாரிடம் ஈசன் தன் திருவிளையாடலை நடத்த ஆரம்பித்துவிட்டார்.மாதம் மும்மாரி பொழிந்த மழையும் நின்றது.விளைந்த விளைச்சலும் நீங்கிப்போனது.தம் நிலத்தில் விதைக்க வைத்திருந்த செந்நெல்லும் ஈசனது நிவேதனத்திற்கு வழங்கி ஆயிற்று.ஈசனின் நித்திய பூசைக்காகவும், பலருக்கு உணவுக்காகவும் நெல்மணிகளை அளித்த அந்த வள்ளல் பெருமான் தாமே ஒரு கூலியாகி கூலிக்கு நெல் அறுக்கிறார்.தாம் அறுத்த நெல்லிலே செந்நெல்லை தனியாகவும் கார்நெல்லை தனியாகவும் பிரிக்கிறார். செந்நெல்லை ஈசன் நிவேதனதிற்கு சமைத்து அளித்துவிட்டு தாம் கார்நெல் அரிசியை சமைத்து உண்கிறார்.ஈசரது வஞ்சனையால் அடியார் கூலிபெறும் அத்துனை நெல்மணிகளும் செந்நெல்லாகவே கிடைக்கப்பெற அடியாரும் ஈசனின் மகிமை இது.அடியேன் ஈசனின் நிவேதன செந்நெல்லிற்கு அலைய கூடாது என மனமுவந்து அளவற்ற செந்நெல்லை தந்தருளினார் என்று பேரனந்தம் கொண்டார்.தாம் உண்ண கார்நெல்லோ வேறு நெல்வகையோ கிடைக்காது போனமையால் தான் வெறும் கீரையை மட்டும் சமைத்து தம் இல்லத்தரசியுடன் உண்டு வந்தார். இந்நிலையிலும் ஈசனுக்கு செந்நெல் அரிசி கீரை சமைத்து மாவடுவுடன் நிவேதனம் செய்து வந்தார் பெருமான்.ஈசனின் பேரருளால் உண்ண கீரையும் கிடைக்காமல் போனதால் வெறும் நீரை மட்டும் உணவாக உட்கொண்டு தளர்ந்த நடையுடன் தாயனார் ஈசனுக்கு அமுது சமைத்து நிவேதனம் செய்ய ஆலயம் நோக்கி நடந்து செல்கிறார்.பல நாட்கள் அமுது செய்யாத காரணத்தால் அவரது நடை தளர்கிறது.சற்றே தடுமாறி ஈசனின் நிவேதன அன்னகூடையுடன் தரையில் சரிகிறார் பெருமான்.நிவேதன அன்னம் தரையில் சிதறிவிடுகிறது. பெருமானர் ஐயகோ என் பாவம் யான் செய்தேன் இன்று ஈசரது நிவேதன அமுதத்தை தரையில் சிந்த செய்துவிட்டேனே. ஈசர் பட்டினி கிடக்கநேரிட்டதே என்று கூறி தம்மிடம் இருந்த அரிவாளால் தம் கழுத்தை அரிய முற்படுகிறார் தாயனார் பெருமான்.ஈசரும் தாய் உள்ளத்தோடு அடியார் கரத்தினை இறுகபற்றி மாவடுவுடன் அன்னம் அருந்தும் விடேல் விடேல் என உரைத்து அடியாரின் கரத்தை ஓர் கரத்தால் பற்றி மறுகரத்தால் தரையில் சிந்திய அன்னத்தை உண்டு மகிழ்ந்து உமையவளுடன் விடைமீது காட்சி தந்தருளி அரிவாட்டாயர் எனும் திருநாமம் தந்தருள்கிறார். அதோடு அடியார் தம் இல்லத்தரிசியுடன் தன் திருக்கயிலை தலத்திலே நீங்கா இடம்பெற்று இன்புற்று வாழும் நிலையை அருள்கிறார்.63 நாயன்மார் பெருமக்களில் ஒருவராக அரிவட்டாயரை தம் ஆலயத்துள் இடம்பெற செய்கிறார். வள்ளலையும் இல்லாதவராய், இல்லாதவரையும் வள்ளலாய் மாற்றிடும் மாயனும் அவனன்றோ. அவனது திருவிளையாடல்களுக்கு அளவே இல்லை. திருஅரிவாட்டாயரின் திருவடிகளுடன் ஈசன் பொற்பாத கமலங்களையும் வணங்கி எவ்வினையும் அண்டாது வாழ்வில் வளம்பெறுவோமாக. இப்பதிவை கண்டுமகிழும் அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அவர்தம் சுற்றத்திற்கும் ஈசன் அருளால் யாதொரு இன்னலும் இன்றி வளமோடு வாழ எந்தை ஈசனிடம் பிரார்த்திக்கிறேன். நன்றி.ஈசன் அருளால் வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய

Comment here