சினிமா

ஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி! – ரஜினி பேச்சு

Rate this post
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றது. இப்படத்தின் முதல்கட்ட படபிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை திரும்புவதற்கு முன், மேற்குவங்க மாநிலம் பெலூரில் உள்ள ஶ்ரீராமகிருஷ்ணா மடத்துக்கு சென்ற ரஜினிகாந்த், மடாதிபதி சுவாமி சமரனானந்த ஜி மகராஜை சந்தித்து ஆசி பெற்றார்.
இந்நிலையில், சென்னை திரும்பியதும் முதல் நிகழ்ச்சியாக தனியார் ஹோட்டல் ஒன்றில் எம்.ஜி.ஆர் பல்கலை கழக வேந்தர் ஏ.சி.சண்முகத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ரஜினி, எல்லோருடைய இதயத்தில் ஆண்டவன் இருக்கிறார். ஏழைகளுக்கு நாம் செய்யும் உதவியே முக்கியம். அதுவே ஆண்டவனுக்கு செய்யும் புண்ணியம். உழைப்பால், முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்றார்.
ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தம்மை மிகவும் கவர்ந்த ஒன்று என கூறிய ரஜினிகாந்த், அதைவிட சண்முகத்தின் தலை அலங்காரம் தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று எனவும், தானும் அவரை போல முடியை வைத்திருக்கலாம் எனவும் நகைச்சுவையாக பேசினார்.
மேலும் பேசிய அவர், “எறும்பு போல உழைத்து இரும்பாக இருக்க வேண்டும்” என்ற பழமொழியை, “இரும்பு போல் உழைத்து எறும்பு போல் இருக்க வேண்டும்” என மாற்றிக் கூறிவிட்டார். தான் மாற்றி கூறி விட்டதை உணர்ந்து உடனே அதனை திருத்திய ரஜினி, இதனை இணையத்தில் பலர் கேலி பொருளாக்கி விடுவார்கள் என்றும் தம்மை தாமே கேலியும் செய்து கொண்டார்.

Comment here