இந்தியா

ஆதார் எண் இணைத்த, ரயில் பயணிகள் மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ள ஐஆர்சிடிசி அனுமதி

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி நிறுவன இணையதளம் வாயிலாக ரயில் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். ஒரு பயணி மாதத்திற்கு ஆறு டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ள தற்போது அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஆதார் எண் இணைத்த, ரயில் பயணிகள் மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ள ஐஆர்சிடிசி அனுமதி வழங்கியுள்ளது. அக்டோபர் 26ம் தேதியில் இருந்து இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் ”ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஆதார் எண் இணைப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஒருவர் முதல் ஆறு டிக்கெட் முன்பதிவு செய்யும் வரை ஆதார் எண் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

அதேசமயம் ஆறு டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்யும் போது ஆதார் எண் குறிப்பிட வேண்டும். இதற்கு ஐஆர்சிடிசி இணையதள கணக்கில் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யும் பகுதியில் ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை பதிவு செய்ய தக்க பாஸ்வேர்டு மூலம் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம்” என அதிகாரிகள் கூறினார்.

Comment here