சம்பவம்

ஆப்கானிஸ்தானில் கண்ணி வெடி தாக்குதலில் 9 பேர் பலி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகள் போலீசாரையும், ராணுவ வீரர்களையும் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் அப்பாவி மக்களே அதிக அளவில் பலியாகின்றனர். இந்த நிலையில், டேய்குந்தி மாகாணத்தில் உள்ள நவாமாயிஸ் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் கண்ணிவெடியை புதைத்து வைத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இந்த கண்ணி வெடியில் சிக்கியது.

கண்ணி வெடி வெடித்து சிதறியதில் அந்த வாகனத்தில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதேபோல் பர்யாப் மாகாணத்தில் உள்ள தவ்லத் அபாத் மாவட்டத்தில் சிறுவர்கள் சென்ற வாகனம் ஒன்று, கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் 4 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

Comment here