Sliderகல்வி

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல்

சித்தர்கள் என்றாலே இப்போதெல்லாம் பெரும்பாலோரின் மனச்
சித்திரிப்பு, உண்மைக்கு மாறான புரிதலுடன் கூடியதாகத்தான்
இருக்கிறது. தாடி வைத்து, சுலபத்தில் புரியாமல் பேசினால்
அவரைச் சித்தர் என ஒரு பொதுப் பெயர் சூட்டிப் பாராட்டிவிடுவது, இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது.

சித்தர்களில் தலை சிறந்த திருமூலர், “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்கிறார். சித்தர்கள் என்போர் அமுதூறும் தமிழில் பெரும் வித்தைகள் படைத்தோர். அரிய பல வாழ்வியல் கலைகளை நடைமுறைப்படுத்தும் முறை அறிந்த விற்பன்னர்கள்.சித்தர்கள் என்போர் வெறும் மருத்த்வர்கள் மட்டுமல்லர். வெற்று வேதாந்தம் பேசும் வறட்டுப் புலவர்களும் அல்லர். வெந்ததைத்
தின்று விதி வந்ததும் போகச் சொல்லும் கர்மவினையைப் போதிக்கும் வைதீக சமயக் கும்பலைச் சேர்ந்தவரும் அல்லர்.
அவர்கள் வாழும் போதே வாழ்வின் பயனை, மண்ணிலேயே
விண்ணைக் காணச் சொன்னவர்கள். தற்போது கிடைத்த உடலைக் கொண்டே, அதைக் கற்பங்கள் பல உண்டு, பல காலம் வாழும்
வழி அறிநது, மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் வித்தை அறிந்தவர்கள். கர்ம வினையை வாழும் போதே கழிக்கும் வித்தை அறிந்தவர்கள். பிறத்தலின் பயன் முடியும் வரை இங்கேயே வாழக் கற்றவர்கள். பிறத்தலின் பயனே பரிணாமத்தின் அடுத்தபடி போவதுதானே! விரும்பும் வரை இறப்பைத் தள்ளிவைக்கும் வித்தை கற்றவர்கள்.

இந்த அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையையும் இயக்குகின்ற சக்தியை உணர்ந்தவர்கள். அவர்கள் காண்கின்ற எல்லையற்ற பரம்பொருள் இங்கும் எங்கும் விரவி இருப்பதை உணர்ந்தவர்கள். சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். எந்த மதத்தில் இருந்தாலும் பரம் பொருளை உணர்ந்தவர்கள்.

சொல்லப் போனால் மனித குலத்தில் யார ஒட்டுமொத்தமாக ஆனந்தமாக இருக்கிறார்கள்?
இறப்பு இல்லாத மனிதர்கள் யார்?
மூப்பு இல்லாத மனிதர்கள் யார்?
நோய் இல்லாத மனிதர்கள் யார்?
புத்தர் இறப்பு, மூப்பு, நோய் முதலிய மனிதனின் துக்கங்களைப்
பார்த்துத்தானே அதற்கு வழி காணத் துறவு பூண்டார் என்று
கதைகள் கூறுகின்றன. ஆனால் இதுவரை மனித குலத்தின் மாறாத இந்தத் துயரங்களுக்கு விடிவு வந்ததா? யாராவது, எந்த மதமாவது, இது செய்தால் இறப்பு, மூப்பு, நோய் வராது என்று அறுதி இட்டுக் கூறி, வழியைக் கூறி இருக்கிறார்களா?

ஆனால் சித்தர்கள் அனைவரும் மானுடத்தின் இத்தகைய
ஒட்டுமொத்த துயரங்களுக்கு வழி முறை கூறி இருக்கிறார்கள்.
அதுவும் ஒரே மாதிரி கூறியிருக்கிறார்கள்.
மரணமில்லாப் பெருவாழ்வே, அவர்கள் லட்சியம். வாழும் இதே
உடலில் இருந்தே முக்தி பெறும், விடுதலை பெறும் ஆர்வம்
கொண்டவர்கள்.
வாழ்வின் அத்தனை புதிர்களுக்கும் விடையைக் கண்டவர்கள்.
அவர்கள் தொடாத வாழ்வின் நெறிகளோ, உண்மைகளோ
எதுவும் இல்லை எனலாம். ஆனாலும் சித்தர்கள் எனப்படுவோர்,
மிகவும் நடைமுறை வாதம் கொண்டோர். அவர்களின் அறிவுப்
பாதையில் வெறும் வேதாந்த, சித்தாந்தப் பேச்சுகள் மட்டும் இல்லை. கூடவே அத்தனைக்கும் நடைமுறைப்படுத்தும் விதிமுறை அறிந்தவர்கள். வாழ்வின் அத்தனை விதி முறைகளும் அறிந்து வாழ்வின் விதியை வாழும் போதே மாற்றும் வல்லமை படைத்தவர்கள். வினையைப் போக்க மீண்டும் மீண்டும் பிறப்பதை மறுத்தவர்கள்.
தானே இறையென தெரிந்தவர்கள் மட்டுமல்லர்.
தானே இறையென முற்றும் உணர்ந்தவர்கள் .
இனி அவர்கள் சிந்தையில் மலர்ந்த அறிவியல் உண்மைகள்
சிலவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
தொடரும்
இந்தக்கட்டுரை 2011 இல் வல்லமை மின் இதழில் வெளிவந்தது .
முகநூல் நண்பர்களின் மீள் வாசிப்பிற்க்காக இங்கு பதிகிறேன்

நன்றி திரு கமலக்கண்ணன் அவர்களின்
ஞானக் கனல்
-அண்ணாமலை சுகுமாரன்

Comment here