ஆர்.கே.நகர் இடைதேர்தல் முறைகேடு – ராஜேஷ் லக்கானி ஐகோர்ட்டில் பதில் மனு

5 (100%) 1 vote

ஆர்.கே.நகர் இடைதேர்தல் முறைகேடு சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக காவல்துறைதான் என்று தேர்தல் ஆணையம் சார்பில் ராஜேஷ் லக்கானி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி யார் மீதும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே தேர்தல் ஆணைய உத்தரவுப்படி டிடிவி தினகரன், உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கு குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தேர்தல் ஆணையத்தை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் மனு தாக்கல் செய்தார்.

பணப்பட்டுவாடா புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கே உள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டியது சென்னை காவல் ஆணையர் பொறுப்பு. காவல்துறை விசாரணையில் தலையிடாமல் நாங்களும் பின் தொடர்கிறோம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணையை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை காவல் கிழக்கு இணை ஆணையர் மனோகரனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.பி.வைரக்கண்ணன் தொடர்ந்த வழக்கில்,‘‘ ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது டிடிவி.தினகரன் சார்பில் வாக்காளர்களுக்கு சரளமாக பணப்பட்டுவாடா மற்றும் தங்கம் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பணப் பட்டுவாடா குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சில கேள்விகளை கேட்டு இருந்தேன். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் டிடிவி தினகரன், உள்ளிட்ட 6 பேர் மீதுவழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்து ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தது.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி யார் மீதும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே தேர்தல் ஆணைய உத்தரவுப்படி டிடிவி.தினகரன், உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தனது புகாரில் 3 நபர்களின் பெயர்களை குறிப்பி்ட்டு உள்ளது. ஆனால் அந்தப் பெயர்கள் எப்ஐஆரில் இடம் பெறாமல் அடையாளம் தெரியாதவர்கள் எனக்கூறி மறைக்கப்பட்டது ஏன்? என கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
மேலும் இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலர், மாநகர போலீஸ் ஆணையர் ஆகியோர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி வழக்கு விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், ‘‘பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள புகார் மனுவில் மூன்று பேரின் பெயர்கள் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. அதனால் அவர்களை அடையாளம் தெரியாதவர்கள் எனக்கூற முடியாது’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே வழக்கின் புலன் விசாரணையை சென்னை மாநகர போலீஸ் கிழக்கு இணை ஆணையர் மனோகரன் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் நேற்று தேர்தல் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*