விளையாட்டு

ஆஸி. ஓபன்: 7-வது முறையாக மகுடம் சூடிய ஜோகோவிச் ; நடால் போராடி தோல்வி

Rate this post

மெல்போர்ன் நகரில் நடந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னின் போட்டியில் 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்  செர்பிய வீரரும், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோக்கோவிச்.

ஜோக்கோவிச்சுக்கு இது ஹாட்ரிக் கோப்பையாகும். கடந்த ஆண்டில் விம்பிள்டன், யு.எஸ். ஓபன் பெற்று, அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியன் ஓபனையும் ஜோக்கோவிச் கைப்பற்றியுள்ளார்.

பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலை வீழ்த்தினார் ஜோக்கோவிச். இதற்கு முன் ரோஜர் பெடரல், ராய் எமர்ஸன் ஆகியோர் மட்டுமே 6 முறை ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றநிலையில் 7-வது முறையாக ஜோக்கோவிச் வென்றுள்ளார். இதற்கு முன்   2008, 2011, 2012, 2013, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலயன் ஓபனில் ஜோக்கோவிச் கோப்பையை வென்று இருந்தார்.

கடந்த இரு வாரங்களாக மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி இன்றுடன் முடிவுக்கு வந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரும் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ரஃபேல் நடாலை எதிர்கொண்டார் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிச்.

ராட் லேவர் எரினா அரங்கில் நடந்த ஆட்டத்தில், தொடக்கத்தில் இருந்தே இருவரும் விட்டுக்கொடுக்காமல் களமாடியதால், ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது. ஏறக்குறைய 2 மணிநேரம் 4 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் நடாலை 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் நோவாக் ஜோக்கோவிச். இருவரும் டென்னிஸ் களத்தில் 53-வது முறை சந்தித்துள்ளனர், அதில் 8-வது முறையாக இறுதிச்சுற்றில் சந்தித்தபோது நடாலை தோற்கடித்தார் ஜோக்கோவிச்.

31வயதான ஜோக்கோவிச்சுக்கு இந்த ஆஸ்திரேலியன் ஓபன் பட்டம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் பெறும் 15-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். நடாலை வீழ்த்தியவுடன், டென்னிஸ் மைதானத்தை தலைவணங்கி முத்தமிட்டு மகிழ்ந்தார் ஜோக்கோவிச். இதற்கு முன் கடந்த 2012ம் ஆண்டு இருவரும் பைனலில் மோதிக்கொண்டபோது, அந்த ஆட்டம் 5 மணிநேரம் 53 நிமிடங்கள் நடந்தது. இதுதான் ஆஸ்திரேலியன் ஓபன் வரலாற்றில் அதிகநேரம் நடந்தஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியாகும்.

தொடக்கத்தில் இருந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி ஆடிய ஜோக்கோவிச் 3 செட்களையும் தனதாக்கினார். ஒரு செட்டைக் கூட நடாலைக் கைப்பற்றவிடாமல் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிலேயே கொண்டு சென்றார். முதல் செட்டை 36 நிமிடங்களில் வசப்படுத்தினார் ஜோக்கோவிச். 2-வது செட்டிலும் ஜோக்கோவிச் ஆதிக்கம் செலுத்த, அவருக்கு நடால் கடும் நெருக்கடி அளித்தார். ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஜோக்கோவிச்சின் சர்வீஸ் ஏஸ்களை எடுக்காமல் நடால் தவறவிட்டார், மேலும் தானாக செய்யும் தவறுகளை அதிக அளவில் நிகழ்த்தினார். நடால் 20 ஏஸ்களையும், ஜோக்கோவிச் 8 ஏஸ்களையும் வீசினர்.

Comment here