உலகம்

இத்தாலியில் திருடப்பட்ட ஓவியத்தை திருப்பி தருகிறது ஜெர்மனி

பெர்லின்,

டச்சு கலைஞரான ஜான் வான் ஹுய்சூம் கடந்த 1824-ம் ஆண்டு வரைந்த பூந்தொட்டி ஓவியம் உலக புகழ் பெற்றதாகும். விலை மதிப்பில்லாத இந்த ஓவியம் 2-ம் உலகப்போர் தொடங்கும் வரை இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் உள்ள உப்சி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

2-ம் உலகப்போரின் போது இத்தாலியில் ஊடுருவிய ஜெர்மனியை சேர்ந்த நாஜிக்கள், 1943-ம் ஆண்டு அந்த பூந்தொட்டி ஓவியத்தை திருடி சென்றனர். ஆனால் ஜெர்மனியின் மறு ஒருங்கிணைப்புக்கு பிறகுகூட அந்த ஓவியம் நீண்டகாலம் மீண்டும் வெளிவராமல் இருந்தது.

கடந்த ஜனவரி மாதம், உப்சி அருங்காட்சியக இயக்குனர், ஈக் ஸ்மித், ஜெர்மனியில் உள்ள அந்த பூந்தொட்டி ஓவியத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என முறையிட்டார்.

இந்த நிலையில், 2-ம் உலகப்போரின் போது, நாஜிக்களால் திருடப்பட்ட ஓவியம் இத்தாலியிடம் திருப்பி அளிக்கப்படும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெர்மனி வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் விரைவில் இத்தாலி செல்கிறார். அப்போது அவர் உப்சி அருங்காட்சியகத்துக்கு நேரில் சென்று பூந்தொட்டி ஓவியத்தை ஒப்படைப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment here