இந்தியா

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படத்தை இடம் பெறச்செய்து போஸ்டர்: பாஜக எம்.எல்.ஏவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Rate this post
புதுடெல்லி : 17-வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி 7 கட்டங்களாக மே 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில், ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு கெடுபிடிகளை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு விதித்துள்ளது.
சமீபத்தில், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் புகைப்படம் இடம் பெற்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதையடுத்து,  அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் கமிஷனின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அதில், ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரசாரத்துக்கோ எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்றும், இது தொடர்பாக கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த உத்தரவை மீறி டெல்லி பாஜக எம்.எல்.ஏ பிரகாஷ் சர்மா தனது பேஸ்புக் பக்கத்தில், மோடி , அபிநந்தன் வர்த்தமான் ஆகியோர் இடம் பெற்ற இரண்டு புகைப்படங்களை நீக்காமல் இருந்தார். இதைக்கவனித்த தேர்தல் கமிஷன், அந்த பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏ பிரகாஷ் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மார்ச் 1 ஆம் தேதி இந்த போஸ்டரை பாஜக எம்.எல்.ஏ தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில், மோடி, அமித்ஷா, விமானப்படை அதிகாரி அபிநந்தன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். அதில், பாகிஸ்தான் நமக்கு தலைவணங்கி விட்டது. நமது தீரம்மிக்க வீரர் திரும்பி வந்துவிட்டார். மோடியின் ராஜதந்திரத்தால் மிகவும் குறைந்த காலத்திலேயே அபிநந்தன் திரும்ப அழைத்து வரப்பட்டார்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட தேர்தல் அதிகாரி கே.எம் மகேஷ், “விஸ்வாஸ் நகர் எம்.எல்.ஏ பிரகாஷ் சர்மாவின் செயல் தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும். தனது செயல் குறித்து விளக்கம் அளிக்க அவருக்கு மார்ச் 11 ஆம் தேதி  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comment here