Sliderஆன்மிகம்

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பக்தர்கள் தீபம் ஏற்ற தடை !

Rate this post

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பக்தர்கள் தீபம் ஏற்ற நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோயில்களின் வளாகத்தில் இருந்து கடைகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அண்மையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் கோயில் வளாகம் பெரும் சேதமடைந்தது. மின்கசிவு மற்றும் கோயிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோயிலுக்குள் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களான கற்பூரம், எண்ணெய், நெய், ஊதுவத்தி போன்ற விற்பனை செய்யப்படுவதை அறநிலையைத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோயிலுக்குள் இருக்கும் கடைகளை அகற்ற முதல்வர் உத்தரவிட்டதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் உள்ள கடைகளை அகற்றும் பணிகள் தொடங்கின. அதுபோன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அறநிலையத் துறை கோயில்களிலும் இந்த பணிகள் நடைபெற்றது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி கூறுகையில், “கன்னியாகுமரி பகவதியம்மன், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜாகோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், வேளிமலை கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்கள் மற்றும் 23 சிறிய கோவில்களில் கோவில் வளாகத்தில் இருந்த எளிதில் தீபிடிக்கும் பொருட்களை விற்ற கடைகள் அனைத்து அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் நெய் தீபம் உள்ளிட்ட தீபங்கள், கற்பூரம் ஏற்ற இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. பக்தர்கள் யாரும் தீபம், சூடகம் ஏற்ற கூடாது. கோவிலின் உள்புறம் இருந்த அனைத்து வகையான கடைகளும் அகற்றப்படும். கோவில் கடைகள் ஏலம் எடுத்தவர்களும், அந்த கடை அகற்ற உத்தரவிடப்பட்டிருந்தால் இன்று முதல் கடை திறக்க கூடாது. அவர்களது ஏல தொகை கணக்கு பார்த்து திருப்பி கொடுக்கப்படும். பின்னர் கடைகளில் உள்ள பொருட்களை வியாபாரிகள் எடுக்கலாம். அதன் பின்னர் கடை அகற்றப்படும். சில கோவில்களில் அதிகபட்சமாக பிரசாத கடை, மலர் மற்றும் மாலை கடை, பன்னீர் கடைகள் அனுமதிக்கப்படும். பக்தர்கள் நெய் விளக்கு ஏற்ற விரும்பினால் அல்லது விளக்கேற்ற விரும்பினால் கோவிலில் எரிந்து கொண்டிருக்கும் வாடா விளக்கில் நெய் அல்லது எண்ணெயை ஊற்றலாம்” எனக் கூறினார்.

Comment here