உலகம்தமிழகம்

இன்று சர்வதேச யோகா தினம்

இன்று சர்வதேச யோகா தினம்:பொது விடுமுறை கிடையாது

 

                                    இரண்டாவது சர்வதேச யோகா தினம், நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளில் விருப்பமுள்ள மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம்; அரசு பொது விடுமுறை கிடையாது.

இதுதொடர்பாக, மத்திய பணியாளர் – பயிற்சித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:

                         சர்வதேச யோகா தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை கிடையாது. அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும். யோகா தின நிகழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம். எனினும், யோகா தின நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் வகையில், பல்வேறு நகரங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

         சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யோகாசன நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சண்டீகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

                           வாராணசி, இம்பால், ஜம்மு, சிம்லா, வதோதரா, லக்னெள, பெங்களூரு, விஜயவாடா, புவனேசுவரம், ஹோஷியார்பூர் ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவில் யோகாசன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, 391 பல்கலைக்கழகங்களிலும், 16,000 கல்லூரிகளிலும், 12,000 பள்ளிகளிலும் யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

          ஸ்மிருதி இரானி அழைப்பு: இதனிடையே, “”ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளோடு இணைந்து யோகாசனப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்” என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அழைப்பு விடுத்துள்ளார்.

தில்லியில் தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:

                              மிகவும் பழைமை வாய்ந்த யோகக் கலையானது, நமது உடல் இயக்கங்களை மேம்படுத்தவும், பார்வை-இயக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவும் பயன்படுகிறது. எனவே, ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளுடன் சேர்ந்து யோகாசனப் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

                       நிகழ் கல்வியாண்டில், 6 மத்தியப் பல்கலைக்கழகங்களில் யோகாசனப் பயிற்சிக்கென தனியாக ஒரு துறை உருவாக்கப்படும் என்றார் ஸ்மிருதி இரானி.

நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் உள்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 300 மாணவர்கள் கலந்து கொண்டு, யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

Comment here