Sliderஇயல்தமிழ்

இறைவனே கொண்டுவந்தும் கிழித்தெறியப் பட்ட ஓலை !

சென்ற ஒரு பதிவில் இறைவனின் கையொப்பத்துடன் கூடிய ஓலை ஒன்று பாதுகாத்து வைக்கபப்பட்டு இருப்பதைப் பற்றியும் அவைகள் மகா சிவராத்த்ரி அன்று பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவைதையும் எழுதியிருந்தேன் நண்பர்கள் கவனத்தை அது அதிகம்ஈர்த்தது
பலர் ஆர்வம் காட்டிஇருந்தனர்

இப்போது இறைவனே கொண்டுவந்த ஓலை ஒன்றை கிழித்து எறிந்த வரலாறு ஒன்றை காண்போம்

தற்போது விழுப்புரம் மாவட்டம் என அழைக்கப்படும் பகுதியில் திருகோயிலூர் வட்டத்தில் இருந்த திருமுனைப்பாடி நாடுஎனும் பகுதியில் திருநாவலூர என்று தற்போது அழைக்கப்படும் ஊரில் வாழ்ந்த சடையனார் எனும் சைவ மரபினருக்கு திருமகனாக அவதரித்த அருளாளர்நம்பிஆரூரர் எனும் நாமமுடன் சிறப்புற வாழ்ந்தார் .

“தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்
நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க
ஐம் படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டிச் சாத்தி
செம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு” …..
இவ்வாறு தந்தையார் சடையனார் இத்தனை சிறப்பாக வளர்த்த நம்பிக்கு
புத்தூர் சடங்கவியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும்
ஏற்ப்பாடுகள் செய்யத்தொடங்கினார்
எப்படியெல்லாம் ஏற்பாடுகள் நடைபெற்றது தெரியுமா ?


“நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி
உறைமலி கலவை சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார்”

இவ்வாறு மணக்கோலம் பூண்ட நம்பி குதிரை மேல் ஏறி பலரையும் கவரும் வண்ணம்மணமகளும் அவர்தம் தோழியரும் மறைந்திருந்து காண கம்பீரமாக வந்தடைந்தார் .

அப்போதுதான் வந்தார் நமது நாயகர் !
நடந்தது அந்த எதிர்பாரா திருப்பம் !
இத்திருமணத்தைத் தடுக்க இறைவனே,ஒரு முதிர்அந்தணர் வேடம் பூண்டு .
“காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச்
சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின்
மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க
ஆதபம் மறைக் குடை அணிக்கரம் விளங்க ”

இப்படி சிறப்புற வந்தவரை அனைவரும் ஆர்வமுடன் நோக்கும் வேளையில் அவர் உரைத்தது இடியென பாய்ந்தது அனைவர் செவிகளிலும் .

“வந்துதிரு மாமறை மணத் தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று
இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும் என்றான்
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான் ”

முதலில் என் இந்த வழக்கை முடித்து பின் திருமணம் செய்க என முழங்கினார் !

“முன்னுடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான்
ஆவதிது கேண்மின் மறையோர் என் அடியான் இந்
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான்”
இதைக் கேட்டு அனைவரும் இடி கேட்டாற்போல் மயங்கி நிற்க ,
இடி இடி என ஓங்கிச் சிரித்தார் நம்பி .
ஓலையுடன் வந்த அந்தணர் ,நான் கூறுவது கேட்டு நீ சிரிப்பது ஏன் ?

“அக் காலம் உன் தந்தை தன் தந்தை ஆள்ஓலை ஈதால்
இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ” என வினவ ,

சிரமத்துடன் சிரிப்பை நிறுத்திய நம்பி ,
கோபத்துடன் முதிய அந்தணரை நோக்கி

ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோன் என்றார்

வந்த அந்தணரோ எதற்கும் அசராத கல்லுளிமங்கன் ஆயிற்றே !

“நான் பித்தனோ அல்லது பேயனோ அதைப்பற்றி கவலை இல்லை
நீ இப்போது என் பின் வா என்றழைத்தார் .”

அதற்க்கு நம்பியோ மேலும் மேலும் பேச்சு வேண்டாம் ஓலை இருக்கிறதென்றால் ஓலை காட்டுக என்றார் .
அந்தணர் காட்டிய ஓலையை பற்றிஅதை சுக்கு நூறாக கிழிதெறிந்தார் நம்பி.
அப்போதும் அசராத அந்த அந்தணர் மீண்டும் அந்தணர் அவையில் “மிக்கார் மறையவர் அடிமை
ஆதல் இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயா என்றார் வந்தவாறிசைவே அன்றோ
வழக்கு இவன் கிழித்த ஓலை தந்தை தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான்
இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று
விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ?”

ஆயினும் இப்போது கிழித்தது படியோலையே என்றும்
மூல ஓலைதன்னால் காட்ட இயலும் எனசபையிடம் அந்தணர் கூறினார்
சபையோரும் ஓலை சுருளை பிரித்துப் பார்த்தனர்
(ஜெராஸ் எடுக்கும் வழக்கம் அப்போதே இருந்துள்ளது பாருங்கள் )

பிறகு ஓலையுடன் வந்த அந்தணரே இவன் தந்தை அவன் தந்தை எழுதிய வேறு எழுத்து இருப்பின் அதை இவ்வோலையுடன்
ஒப்புநோக்குக என்றார் .
ஒப்பு நோக்கிய சபையோர் இரண்டும் ஒன்றே என தீர்மானித்தனர் .

பிறகு ஊர் சபையார் அந்தணரிடம் இத்தனை காலம் நீர் எங்கிருந்தீர் ?
எங்களில் யாரும் உங்களை அறிந்தில்லையே என வினவ

“பெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை
ஒருவரும் அறியீராகில் போலும் என்றுரைத்துச் சூழ்ந்த
பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத்
திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்”

எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள்
நம்பர் தங்கோயில் புக்கது என்கொலோ என்று நம்பி
தம்பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப மாதோடு
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்குஉணர்த்தல் உற்றார்

உங்கள் கோவிலில் உறையும் இறை யாமே எனக் கூறி ,
விடைமேல் காட்சி அளித்தார் .
அனைவரும் திகைத்து உணவு பூர்வமாகத் தொழுதனர்
எங்கும் அரோகரா ! நமசிவய முழக்கம் எழுந்தது !

பின்பு இறைவர், நம்பியை நோக்கி `”நமக்கும் அன்பின்பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனைபாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற் றமிழ் பாடுக`” என்றார்.

அதற்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், `கோதிலா அமுதே! இன்று உன் குணப்பெருங்கடலை நாயேன்யாதினை அறிந்து என்சொல்லிப்பாடுகேன்` என்றார்.
அதற்கு இறைவர் `முன்பு என்னைப் பித்தனென்றே மொழிந்தனை,ஆதலால் என் பெயர் பித்த னென்றே பாடுவாய்` என்றார்.

அப்பொழுது சுந்தரமூத்தி சுவாமிகள்

`பித்தாபிறைசூடீ` என திருப்பதிகம் பாடினார்

பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.

இவ்வரலாற்றை உறுதிபடுத்தும் கல்வெட்டுகள் பல திருவெண்ணெய்நல்லூர் அருள்மிகு வேற்கண்ணிநாயகி உடனுறை தடுத்தாட்கொண்டநாதர் கோயிலில் இருக்கிறது .
அத்தகைய கல்வெட்டுச் சான்று இதோ ,

`
ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவநச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு உஎ (27)

ஆவது மேஷ நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்த்தஸியும் புதன்கிழமையும் பெற்ற அத்தத்து நாள்

திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்கு மத்யஸ்தன் செஞ்சி உடையான்

உதையன் கைலாய முடையான் இட்ட பிச்சன் என்று பாடச் சொன்னான் திருச்சின்னம்

இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சும், ஆவுடைய நாயனார் சீபாதத்து சாத்தின

கொடியுடன் கோத்தகால் காறையுடன் ஒன்பது மாற்றில் பொன் இரு கழஞ்சு. இது பன்மாஹேஸ்வர

` (S.I.I. Vol XII The Pallavas No. 231.)

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆளுடைய நம்பி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர்.

அவர் நாச்சி மாரோடு எழுந்தருளியிருக்கும் இடம் ஆட்கொண்ட தேவர் தீர்த்தக் குளமான தேவனார் கேணியின் கீழ்க்கரை ஆகும்.
இச்செய்திகள் `பூமன்னுபதுமம்பூத்த ஏழுலகும் தாம் முன் செய் தவத்தால் பருதிவழித்தோன்றி` என்று தொடங்கப்பெறும் மெய்க்கீர்த்தியையுடைய இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன.
இக்கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1148 மே மாதம் ஒன்பதாம் தேதி ஆகும்.
ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரப்பெருந்தெரு என்றும், ஒரு சுரபி மன்றாடிக்கு நம்பி ஆரூரன் கோன் என்றும், ஒரு ஊர்க்கு, தடுத்தாட்கொண்நல்லூர் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இவ்வூரில் வழக்குவென்ற திருவம் பலம் என்னும் பெயரால் கருங்கல் கட்டிடம் ஒன்று இருந்ததை, திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவரின் 29 ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது.

இந்த அம்பலம் உள்ள இடம் வேறு ஒருவர்க்கு உரியதாய் இருந்தது. அதற்குப்பதில் கோயிலுக்குரிய ஒரு இடத்தை அவர்க்குக் கொடுத்து இந்த இடம் கொள்ளப்பட்டது என்பதையும் அக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.

இவ்வாறுஓலையில் எழுத்தப்பெற்ற ஆவணங்கள் மிக உறுதியான செய்திகளாக ஆவணங்களாக பண்டைய நாளில் மதிக்கப்பட்டன .,பாதுகாக்கப்பட்டன . என்பதும் ,
அந்தக்காலத்திலேயே இந்நாளில் xrox எடுக்கும் வழக்கம் போல் மூல ஓலையை படிஎடுத்தனர் .
அந்தக்காலத்திலேயே இன்றைய வங்கிகளில் செய்வதைப்போல் கை எழுத்தை ஒப்புநோக்கியே பின் ஒப்புக்கொண்டனர் .
அடிமைகளாக விற்கும் வாங்கும் பழக்கம் சுந்தரின் காலத்திற்கு முன்பே இருந்து வந்திருக்கிறது .
அதை ஓலைகளில் பதிவு செய்து வந்திருக்கின்றனர்
என்றும் பல விஷயங்கள் இந்த ஓலையைப் பற்றிய செய்திகளால் யூகிக்க முடிகிறது .

இன்னும் பல ஓலை சுவடி சங்கதிகள் இறைவன் அருள் இருந்தாலும் படிப்பவரிருந்தாலும் தொடரும் ..
அண்ணாமலை சுகுமாரன்

Comment here