ஆன்மிகம்

இறைவனை அறிய ஆத்மா

“இறைவனை அறிய ஆத்மார்த்தமாக விரும்புபவன் நிச்சயமாக அவரைக் காண்பான்! கண்டேயாக வேண்டும்”-ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

குழந்தை தாயை நம்புவது போலவும், மனைவி கணவனை நம்புவது போலவும், பார்ப்பதைக் கண் நம்புவது போலவும் தெய்வத்தை நம்ப வேண்டும். நம் மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போக முடியாது. யாரிடம் மன ஏக்கம் உள்ளதோ, யார் இறைவனைத் தவிர வேறு எதையும் விரும்புவதில்லையோ அவர் கட்டாயமாக இறையனுபூதி பெறுவார்.

கடவுள் நமக்கு உடலையும், உள்ளத்தையும் கொடுத்தார். ஆனால், அவற்றை வைத்துக் கொண்டு நம்மை நாமே புதிதாக எப்படி உருவாக்கிக் கொள்கிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது. எப்படியாவது மாற வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தால் போதாது. நமக்குள் சுயசோதனை செய்து, அதற்கு ஏற்ப ஒவ்வொரு எண்ணத்தையும், செயலையும் மாற்றி வந்தால் தான் புதிய வாழ்வு மலரும்.

இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக நாம் மேற்கொள்ளும் விரதங்களும் தான் நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன. சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை மனதில் கொள்பவர்கள் தெய்வத்தன்மையுடன் விளங்குவார்கள்.

பக்தி என்றாலே உலக வாழ்க்கையில் விரக்தி என்று நினைக்க வேண்டாம். உலகை விசாலமான மனதுடன் பார்த்தாலே போதும். தவறாத பிரார்த்தனையும், நம்பிக்கையான பக்தியும், கபடமில்லாத அன்புமயமான உள்ளமும் தான், வாழ்வில் அனைத்தையும் சாதிக்கச் செய்கிறது.

உண்மையான பக்தியிருந்தால் தைரியம் உண்டாகும். தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும். தைரியத்தால் ஒருவன் இந்த பிறவியிலேயே தெய்வநிலையை பெறுவான். உலகத்தார் வியக்கும் வண்ணம், எதிர்பார்க்க முடியாத மாற்றம் கிடைக்க தெய்வபக்தி அவசியம்.

உணவுக்குரிய தானியங்களையும், பழங்களையும், காய்கறிகளையும் தர உதவும் மண்ணும், தண்ணீரும் வழிபாட்டுக்கு உரியதாகிறது. அவைகள் மூலம் தான் நாம் கடவுளை அனுகுகிறோம். அதுபோல், உலக உயிர்கள் உய்ய உதவும் அடியவர்களும் வழிபடத் தக்கவர்கள். அவர்கள் மூலமாக நாம் இறைவனை அனுகினால், அனுக்ரஹம் அதிசுலபமாய் கிட்டும்.

Comment here