சம்பவம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்; குடும்ப உறுப்பினர்களை இழந்த 200 குழந்தைகள்

கொழும்பு,

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமடைந்தனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் பலியானவர்களில் 10 இந்தியர்கள் மற்றும் 40 வெளிநாட்டினரும் அடங்குவர். தாக்குதல்களுடன் தொடர்புடைய ஆசிரியர், மருத்துவர் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால், ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்.டி.ஜே.) மற்றும் ஜமாதி மிலாது இப்ராகீம் என்ற பிரிவினைவாத குழு மீது குற்றச்சாட்டு தெரிவித்த அரசு கடந்த வாரம் அவற்றை தடை செய்தது.

இந்த நிலையில், தொண்டு அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 200 குழந்தைகள் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். பலியானவர்களில் சிலர், தங்களது குடும்பத்திற்கு வருவாய் ஈட்டும் ஒரே நபராக இருந்து வந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. காயமடைந்த நபர்களால் 75 குடும்பத்தினரின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த அறிக்கையில், சிலரால் காயத்தினால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. சிலர் வேலை செய்யும் திறனை இழந்து விட்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comment here