பொது

இலையுதிர் காடுகள் பற்றி அறிந்து கொள்வோம்

ஆண்டின் குறிப்பிட்ட பருவத்தில் இலைகளை உதிர்த்துவிடும் காடுகள் இலையுதிர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இக்காடுகளில் பொதுவாக கோடை காலம், மழை காலம், குளிர் காலம், இலையுதிர் காலம், வசந்த காலம் எனப் பலவித‌  பருவகாலங்கள் காணப்படுகின்றன.

இக்காடுகளில் உள்ள மரங்கள் அகன்ற இலைகளுடன் குறிப்பிட்ட பருவத்தில் இலையை உதிர்த்து விடுவதால் இவை அகன்ற இலை இலையுதிர் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இக்காடுகளில் சில பருவகாலங்கள் வறட்சியாக இருப்பதால் இவை உலர்காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இவை பொதுவாக புவியின் மிதமான மண்டலங்களில் அமைந்துள்ளன.

இக்காடுகளில் வெப்பநிலையானது மழைக்காடுகளைவிடக் குறைவாகவும், கூம்புவடிவ காடுகளைவிட அதிகமாகவும் இருக்கும்.

இக்காடுகளில் உள்ள உயிரினங்கள் இங்கு நிலவும் வெப்பநிலை மாறுபாட்டினை தாங்கி வாழக்கூடிய தகவமைப்பினைக் கொண்டுள்ளன.

இங்குள்ள தாவரங்கள் நீராவிப் போக்கினைக் குறைக்கும் பொருட்டு குறிப்பிட்ட பருவத்தில் இலைகளை உதிர்த்துவிடுகின்றன.

இங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகளில் சில குறிப்பிட்ட பருவங்களில் வேறு இடங்களுக்கு இடம் பெயருகின்றன.

வேறு சில இங்கு நிலவும் பருவ மாற்றங்களை தாங்கி வாழக்கூடிய தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.

Comment here