ஆன்மிகம்

ஈசன் திருவருளால் திருபள்ளியின் முக்கூடல்

எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் திருபள்ளியின் முக்கூடல் முக்கோணநாதேஸ்வரர் ஆலயதரிசனம்.

திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இருந்து பள்ளிவாரமங்களம் வழியாக 5 கி.மீ தூரத்தில் உள்ள மிக பழமை வாய்ந்த,

காவிரி தென்கரைதலங்களில் 86 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 274 தலங்களில் 149 வது தலமாகவும் விளங்கும்

இத்தல வரலாறு இராமாயண இதிகாசத்தில் வரும் ஜடாயுவுடன் தொடர்புடையதாதலால் இத்தலத்தை இங்குள்ள மக்கள் “குருவிராமேஸ்வரம்” என்றும் கூறுகின்றனர். ஒரு முறை காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது. இதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து, “இராவணன் சீதையை எடுத்து வரும் நேரத்தில் நீ தடுப்பாய். அப்போது அவன் உன் சிறகுகளை வெட்ட நீ வீழ்ந்து இறப்பாய்” என்றாராம்.

அது கேட்ட ஜடாயு “பெருமானே, அப்படியானால் நான் காசி, கங்கை, இராமேஸ்வரம், சேது முதலிய தீர்த்தங்களில் மூழ்கித் தீர்த்தப் பலனை அடைய முடியாமற்போகுமே, அதற்கு என்ன செய்வது” என்று வேண்ட, இறைவன் மூக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்குமாறு பணிக்க ஜடாயுவும் அவ்வாறே மூழ்கிப் பலனைப் பெற்றது. இவ்வரலாற்றை யொட்டித்தான் மக்கள் பேச்சு வழக்கில் இப்பகுதியை “குருவிராமேஸ்வரம்” என்று கூறுகின்றனர்.

இதனால் கோவில் எதிரிலுள்ள இத்தீர்த்தமும் கங்கை, யமுனை, சரசுவதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு நிகராக கருதப்படுகிறது. இதில் மூழ்குவோர்க்குப் பதினாறு மடங்கு (கங்கை, சேது) தீர்த்த விசேஷப் பலனைத் தருவதால் இத்தீர்த்தம் “ஷோடசசேது” என்றும் சொல்லப்படுகிறது.

தபோவதனி என்னும் அரசி குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்து அஞ்சனாட்சி அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாக தோன்றினாள். அப்பெண் மணப்பருவம் வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்ததாக
தலவரலாறு கூறும்
தலமாக திகழும்

திருநாவுக்கரசரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்

திருபள்ளியின் முக்கூடல் (குருவிராமேஸ்வரம்) என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் அஞ்சனாட்சி (மைமேவு கண்ணியம்மை) அம்பாள் உடனுறை அருள்மிகு திரிநேத்ரசுவாமி (முக்கோண நாதேஸ்வரர்) சுவாமி ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் அடியேனுக்கு அளித்தார்.

மேலும் அனைத்து அடியார்பெருமக்களும் இந்த இறைவனை தரிசனம் செய்து இவரின் திருவருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் செய்கின்றோம்.

திருச்சிற்றம்பலம்.

Comment here