விளையாட்டு

உலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும்

வெலிங்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் லார்ட்சில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சர்ச்சைக்கு மத்தியில் இங்கிலாந்து அணி முதல்முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. இதில் நியூசிலாந்து 241 ரன்கள் எடுக்க, 2-வது பேட் செய்த இங்கிலாந்தும் 241 ரன்களில் ஆல்-அவுட் ஆகி ஆட்டம் சமன் ஆனது. அதன் பிறகு சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது. இதிலும் இரு அணியும் தலா 15 ரன் மட்டுமே எடுத்து சமனில் முடிந்தது. இதையடுத்து பிரதான ஆட்டம் மற்றும் சூப்பர் ஓவர் இரண்டையும் சேர்த்து அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து (26 பவுண்டரி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்து (17 பவுண்டரி) மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது.

தங்களது நீண்ட கால கனவு நனவானதால் இங்கிலாந்து வீரர்கள் விடிய விடிய கொண்டாடி மகிழ்ந்தனர். சாண்ட்விச், பீட்சா, சாம்பெய்ன் ஆகியவற்றோடு அவர்களது குதூகலம் நீடித்தது. பெரும்பாலான வீரர்கள் அன்று இரவு தூங்கவில்லை. இன்னொரு பக்கம் நியூசிலாந்து வீரர்கள் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் புலம்பி தவித்தனர்.

இந்த நிலையில் இரண்டு முறை டை ஆனதால் இந்த கோப்பையை இங்கிலாந்து, நியூசிலாந்து இரு அணிக்கும் கூட்டாக பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியுள்ளார்.

இது குறித்து கேரி ஸ்டீட் அளித்த பேட்டியில், ‘100 ஓவர்கள் முழுமையாக விளையாடி இருவரும் ஒரே ஸ்கோர் எடுத்த நிலையிலும் தோல்வியை தழுவியதை ஏற்க மனது சஞ்சலப்படுகிறது. ஆட்டம் சமனில் முடிந்ததும் கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து வழங்குவது குறித்து ஐ.சி.சி. பரிசீலித்து இருக்க வேண்டும். இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இது பற்றி யோசிக்க வேண்டும். விதிமுறையை கொண்டு வந்தது அவர்கள் (ஐ.சி.சி.) தான். இந்த விதியை அவர்கள் எழுதும் போது உலக கோப்பை இறுதிப்போட்டியில் இவ்வாறு நடக்கும் என்று ஒரு போதும் நினைத்து இருக்கமாட்டார்கள். சூப்பர் ஓவர் விதிமுறை மட்டுமின்றி இன்னும் பல விஷயங்களை மாற்றுவது குறித்து ஆராய வேண்டும்.

பென் ஸ்டோக்சின் பேட்டில் பந்து பட்டு எல்லைக்கோட்டுக்கு ஓடிய பந்துக்கு 6 ரன்கள் வழங்கியது தவறானது, 5 ரன் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நடுவர்களும் மனிதர்கள் தான். சில சமயம் தவறு நடப்பது சகஜம் தான்’ என்றார்.

Comment here