விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட் : வெஸ்ட்இண்டீஸ் அணி 212 ரன்கள் சேர்ப்பு

சவுதம்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 19-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களமிறங்கினர். இதில் இவின் லீவிஸ் 2 ரன்னில் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். சிறிது நிலைத்து ஆடிய மற்றொரு தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 36 ரன்னில் அவுட் ஆக, அவரை தொடர்ந்து ஷாய் ஹோப் 11 ரன்னில் வெளியேறினார்.

அதன் பின் களமிறங்கிய நிகோலஸ் பூரன் மற்றும் ஹெட்மயர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் ஓரளவு ரன் சேர்த்த ஹெட்மயர் 39 ரன்னில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய ஹோல்டர் 9 ரன்னிலும், ஆந்த்ரே ரஸ்செல் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த நிகோலஸ் பூரன் 63 ரன்னில் அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து, ஷெல்டன் காட்ரெல் ரன் எதுவும் எடுக்காமலும், பிராத்வெய்ட் 14 ரன்னிலும், ஷனோன் கேப்ரியல் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 44.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர மற்றும் மார்க்வுட் தலா 3 விக்கெட்களும், ஜோரூட் 2 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பிளங்கெட் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

இதனையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

Comment here