அரசியல்

ஊதியக் குழு பரிந்துரையால் கூடுதல் நிதிச்சுமை: ரூ.31,000 கோடியைத் திரட்ட ரயில்வே முயற்சி

                                       ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் ரூ. 31,000 கோடி நிதிச் சுமையை, வருவாய் மூலமாக சமாளிப்பதற்கு ரயில்வே துறை முயற்சி செய்யும் என்று அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறினார்.

இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:

மத்திய அரசு கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்த ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களும் வரும் 11-ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

போராட்டத்தைக் கைவிடுமாறு ரயில்வே தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில், சுமுகத் தீர்வு எட்டப்படும் என்றும், ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்படாது என்றும் நம்புகிறோம்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, ரயில்வே ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.12,000 கோடி, அவர்களின் ஓய்வூதியத்துத்கு ரூ.8,000 கோடி மற்றும் இதர சலுகைகள் உள்பட இந்தத் துறைக்கு மொத்தம் ரூ. 31,000 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. அதற்கான நிதியை ரயில்வே துறை எப்படிப் பெறப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிதிச் சுமையை இயன்றவரை வருவாய் மூலமாக சமாளிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.

இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சகத்திடம் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. தேவைப்பட்டால், நிதியமைச்சகத்தைத் தொடர்புகொண்டு நிதியுதவி கோருவோம் என்று அந்த அதிகாரி கூறினார்.

Comment here