உலகம்பிரத்யகம்

என்எஸ்ஜியில் இந்தியாவை சேர்ப்பது சியோல் கூட்டத்தின் நோக்கமல்ல: சீனா

                                                    இந்தியாவை அணுவிநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) சேர்ப்பது சியோலில் நடைபெறும் என்எஸ்ஜி கூட்டத்தின் நோக்கமல்ல என்று சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவை என்எஸ்ஜி-யில் சேர்க்க சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறிய அடுத்த நாளிலேயே சீனா இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தென் கொரியத் தலைநகர் சியோலில் வரும் வெள்ளிக்கிழமை என்எஸ்ஜி நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், இந்தியாவை என்எஸ்ஜி-யில் உறுப்பினராகச் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது.

இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு, என்எஸ்ஜி-யில் இந்தியா இணைவதற்காக அந்நாட்டின் ஆதரவைக் கோரினார். அதைத் தொடர்ந்து தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், என்எஸ்ஜி-யில் இந்தியா உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை என்று கூறினார். இதனால், என்எஸ்ஜி-யில் உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியா நெருங்கிவிட்டதாகக் கருதப்பட்டது.

இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்னிங், பெய்ஜிங்கில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், இந்திய வெளியுறவுச் செயலரின் சமீபத்திய சீனப் பயணம், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பேட்டி ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதிலளித்து கூறியதாவது:

சியோலில் நடைபெறவுள்ள என்எஸ்ஜி நாடுகளின் ஆண்டுக் கூட்டத்தில் இது தொடர்பான (இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பது) விவாதம் ஏதும் நடைபெறவாய்ப்பு இல்லை. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகள் (இந்தியா போன்றவை) என்எஸ்ஜி-யில் உறுப்பினராவது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளன. எனினும், அதில் கையெழுத்திடாத நாடுகளை என்எஸ்ஜி-யில் சேர்ப்பது குறித்து உறுப்பு நாடுகள் இடையே இருவேறு கருத்துகள் உள்ளன. எனவே, இப்போதைய சூழ்நிலையில் இது தொடர்பாக விவாதிப்பது சரியாக இருக்காது.

அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகள் என்எஸ்ஜி-யில் உறுப்பினராவது குறித்து எழுப்பப்படும் கேள்விகளை விவாதிக்கும் நோக்கத்தில் சியோல் கூட்டம் நடத்தப்படவில்லை. எனினும், அனைத்து நாடுகளிடையேயும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால்தான் புதிய உறுப்பினரை என்எஸ்ஜி-யில் சேர்க்க முடியும். இது ஒரு தனிப்பட்ட நாட்டுக்கு எதிராக எடுக்கப்படும் முடிவு அல்ல. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத அனைத்து நாடுகளுக்கும் எதிராக ஒரே கொள்கைதான் கடைப்பிடிக்கப்படுகிறது என்றார் அவர்.

Comment here