மாவட்டம்

என்டிசி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு

என்டிசி பஞ்சாலை தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அங்கிகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காட்டூரில் உள்ள என்டிசி தலைமையகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்தோடு ஒப்பந்த்ததில் கையெழுத்திட்டனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய பஞ்சாலை கழகத்திற்குட்பட்ட என்டிசி பஞ்சாலைகள் இயங்கி வருகிறது. இது தமிழகத்தில் 7 பஞ்சாலைகள் செயல்படுகிறது. கோவையில் கம்போடியா, பங்கஜா, சிஎஸ்அண்ட் டபிள்யூ, முருகன், ரங்கவிலாஸ் ஆகிய 5 மில்களும், சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் காளியப்பா மில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பயனியர் மில் ஆகியவையும் உள்ளது. இந்த 7 மில்களில் நிரந்தர தொழிலாளர்கள் 1,600 பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 1,300 பேர் என மொத்தம் 2,900 பேர் பணிபுரிகின்றனர்.

இத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த உடன்பாடு ஆறு மாதத்திற்கும் மேலாகியும் முடிவு எட்டப்படவில்லை. இப்பஞ்சாலைகளில் உள்ள அங்கிகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான எல்பிஎப், சிஐடியு, காங்கிரஸ், ஏடிபி தொழிற்சங்க நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்ட முறையில் பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர். ஆனால் என்டிசி நிர்வாகம் தொழிலாளர் நலனுக்கு எதிராக தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வந்தது. இதனையடுத்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அடுத்தடுத்த போராட்டங்களில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை திரட்டி ஈடுபட்டனர்.

2018 மே மாதத்துடன் ஊதிய ஒப்பந்தம் முடிந்தது. புதிய சம்பள ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுகடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் 12ம் தேதி வரை 8 முறை நடந்தது. இதில் என்டிசி நிர்வாகம், தொழிற்சங்கத்திற்கும் இடையேயும், மத்திய தொழிலாளர் துறை மண்டல கமிஷனர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சு நடந்தது. இதில் எல்பிஎப் தலைமையிலான ஐஎன்டியுசி, சிஐடியு, ஏடிபி சங்கத்தின் சார்பில் ரூ.3,500 கோரினர். இதனை என்டிசி நிர்வாகம் ஏற்கவில்லை.

இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண, எல்பிஎப், சிஐடியு, காங்கிரஸ், ஏடிபி ஆகிய தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் எல்பிஎப் பார்த்தசாரதி, சிஐடியு சி.பத்மநாபன், ஐஎன்டியுசி சீனிவாசன் மற்றும் ஏடிபி கோபால் உள்ளிட்டோர் டெல்லியில் என்டிசி பஞ்சாலையில் நிர்வாகிகள் சஞ்சய் ரஸ்தோகி, ஆர.கே.சின்கா, பங்கஜ் அகல்வால், மனோஜ், சுகுமாறன் உள்ளிட்ட ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் புதிய ஊதிய உயர்வுக்கான உடன்பாடு எட்டப்பட்டது. இதில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தைவிட ரூபாய் 1,700 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோக பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்டவைகளை சேர்த்து ஒவ்வொரு தொழிலாளியும் ஏற்கனவே பெற்று வந்த சம்பளத்தில் இருந்து 2,100 ரூபாய் அதிகம் கிடைக்க உள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இன்று என்டிசி தலைமையகத்தில் கையெழுத்தானது. இதில் என்டிசி நிர்வாகத்தரப்பினரும், அங்கிகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

Comment here