அரசியல்

என் பிறந்த நாளான ஏப் 20ம் தேதி உண்ணாவிரதம்! – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Rate this post

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வரும் 20ம்  தேதி தனது பிறந்தநாளன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக முதல்வர் சந்திரபாபு  நாயுடு அறிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில்  நேற்று மாநில அரசு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடந்தது. இதில்,  அமராவதியில் ₹100 கோடியில் 125 அடி உயரமுள்ள அம்பேத்கரின் சிலை மற்றும்  அவரது வாழ்க்கை வரலாறு இடம்பெறும் வகையிலான ‘ஸ்ருதி வனம்’ என்ற பெயரில்  அம்பேத்கர் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில்,  ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு  அடிக்கல் நாட்டி பேசியதாவது:

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அம்பேத்கர் பல  சட்டங்களை கொண்டு வந்தது மட்டுமின்றி, தாழ்த்தப்பட்டவர்கள் உயர்ந்த இடத்தை  அடையவும், தீண்டாமைக்காகவும் போராடினார். அவரது நோக்கத்தின்படியே  என்டிஆரும் செயல்பட்டார். இவர்கள் இருவரின் ஆசையை நிறைவேற்ற, எனது  வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளேன். எனது வாழ்வில் ஒரேயொரு  நோக்கம் மட்டுமே உள்ளது. அது ஏழ்மை என்ற வார்த்தை இருக்கவே கூடாது  என்பதுதான்.வரும் 20ம் தேதி எனது பிறந்தநாள் வருகிறது. இந்த பிறந்தநாளை  நான் கொண்டாட விரும்பவில்லை. எனவே, அன்று காலை முதல் மாலை வரை மத்திய  அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆந்திர மாநிலத்தின் உரிமையை  பெறவும், சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்.மோடி குஜராத்தை போன்று ஆந்திர தலைநகர்  அமைப்பதாக தெரிவித்தார். நமக்கு குஜராத்தை போன்ற தலைநகர் தேவையில்லை.  ஆந்திராவை போன்ற தலைநகர் அமைத்தால் போதும். சிறப்பு அந்தஸ்து சட்டத்தில்  உள்ளதை வழங்கினாலே போதும்.

என்டிஆர் இருந்தபோது டெல்லியில் தெலுங்கு  தேசம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதேபோன்று வருங்காலத்திலும் நாம் யாரை  காண்பிக்கிறோமே அவர்களின் ஆட்சியே அங்கு அமையும். தமிழ்நாட்டில் பாஜ  கள்ளத்தனமாக அரசியலில் முன்னேற முயற்சிகளை செய்கிறது. ஆனால், தமிழக மக்கள்  அவ்வளவு சீக்கிரம் பாஜ.வை நுழைய விடமாட்டார்கள். அவர்களிடம் மோடியின்  செயல்கள் பலிக்காது.

சிபிஐ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெகன்மோகன்  ரெட்டி வெள்ளிக்கிழமை தோறும் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். இவர் நமக்கு  நல்லது செய்வதாக கூறி வருகிறார். மக்கள் அனைவரையும் கவனித்து வருகின்றனர்.  விரைவில் அவர்களுக்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள்.எஸ்சி, எஸ்டி  வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி  செய்தது. எக்காரணத்தை கொண்டும் இந்த சட்டத்தை மாற்ற விடமாட்டேன். நாடு  முழுவதும் உள்ள தலித் மக்கள் அவர்களின் உரிமைக்காக போராட வேண்டும்.  தேவைப்பட்டால் இதற்காக நான் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வேன்.  பிரதமர் மோடி தலைமையில் பாஜ.வினர் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதை கண்டித்து  உண்ணாவிரத நாடகம் நடத்தினர். நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு மோடிதான்  காரணம்.இவ்வாறு அவர் பேசினார்.

Comment here