எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலே நாம் சபதம் ஏற்போம்! – முதல்வர் எடப்பாடி பேச்சு!

5 (100%) 1 vote

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பிறகு விழா மேடையில் எம்.ஜி.ஆர். திரு உருவப்படத்தை முதல்வர் திறந்து வைத்தார். அதன் பிறகு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றபொழுது, நானும், துணை முதலமைச்சரும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம் என்ற ஒரு கருத்தைச் சொன்னேன். நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்ற கருத்தை மக்களிடையே எடுத்து வைத்தோம். இதில் ஸ்டாலின் என்ன குறைகண்டு பிடித்தார் என்று தெரியவில்லை. அவர் பேட்டி கொடுக்கும்பொழுது, உள்ளக்குமுறலோடு அவர் வெளிப்படுத்திய கருத்து என்னவென்று ஊடகங்கள், பத்திரிகை வாயிலாக நாம் பார்த்தோம், உங்களுக்கும் தெரியும். எந்தளவிற்கு அவர் விமர்சனம் செய்துள்ளார், எந்தளவிற்கு எங்கள் மீது கோபம் கொண்டுள்ளார் என்பது அவருடைய உள்ளக்குமுறலில் இருந்து நாங்கள் பார்க்க முடிகிறது.

ஆகவே, நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ஏனென்று சொன்னால், இந்த இயக்கம் ஒன்றாக இருக்கக்கூடாது, இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று பலரின் துணையோடு அவர் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். அவர் கனவு கானல்நீராகத்தான் இருக்கும் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டுகின்றேன். எவ்வளவு இன்னல்கள், துன்பங்கள் இருந்தாலும் நாங்கள் இணைந்து செயல்பட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலே நாம் சபதம் ஏற்போம். இரு பெரும் தலைவர்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதே நம்முடைய இலட்சியம்.

அதேபோல, புயல், வெள்ளம், வறட்சி எது வந்தாலும் சரி, மக்கள் பாதிக்கப்பட்டால், எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்திலும் சரி, மக்களுக்கு ஓடோடிப் போய் உதவி செய்கின்ற ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை மக்கள் உணருவார்கள். ஆகவே, இந்த இயக்கம் மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கம். இவர்களைப்போன்று, ஒரு குடும்பத்திற்காக ஆட்சி செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சி அல்ல. நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சி.

அதேபோல, இருபெரும் தலைவர்கள் எப்படி கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுக்கும் திட்டப்பணிகளை எடுத்துச் சென்றார்களோ அதேபோல அம்மாவினுடைய அரசும், கடைக்கோடி யில் இருக்கின்ற மக்களுக்கு திட்டப்பணிகளை எடுத்துச் செல்வதில் இரவு பகல் பாராமல் உழைத்து முதன்மையாக விளங்கிக் கொண்டிருக்கின்ற அரசு இந்த அரசு.

விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெற வேண்டுமென்பதற்காக நீண்ட நாட்களாக விவசாயிகள் அரசுக்கு விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக குடிமராமத்து என்னும் அற்புதமான திட்டத்தை அம்மாவினுடைய அரசு துவக்கி, முதற்கட்டமாக ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்து, 1519 ஏரிகளில் பணிகள் துவங்கப்பட்டு இன்றைக்கு நிறைவடைந்திருக்கின்றன.  அடுத்தகட்டமாக ரூபாய் 300 கோடி குடிமராமத்துப் பணிகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது.

அதன்மூலம், பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தூர்வாரப்படும். அதுமட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்கள், நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் எல்லாம் குடிமராமத்து திட்டத்தில் பங்குபெற்று அவர்களும் சொந்த செலவிலே ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை அள்ளுவதற்கு உதவி செய்தார்கள். விவசாயப் பெருங்குடிமக்களும், விவசாய பிரதிநிதிகளும் ஆங்காங்கே ஏரி, குளங்களில் இருக்கின்ற வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து, தங்கள் நிலங்களுக்கு எருவாக இட்டார்கள்.

ஆகவே, இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய, பிரம்மாண்டமான திட்டம். விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக விளங்குகின்ற திட்டம். இத்திட்டம் மூலமாக, பருவமழை பொழிகின்றபொழுது கிட்டத்தட்ட 30 சதவீதம் நீர் தேங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித்தந்த அரசு அம்மாவினுடைய அரசு என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஒரு மனிதனுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு விவசாயிகளுக்கு உயிராக இருப்பது நீர். அந்த நீரை செறிவூட்டுவதற்காக கிட்டத்தட்ட ரூபாய் 1000 கோடி அம்மாவினுடைய அரசால் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்றாண்டுகளில் தடுப்பணை கட்டும் பணி துவங்கப்படும். முதற்கட்டமாக இந்த ஆண்டு ரூபாய் 350 கோடி தடுப்பணை கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலமாக ஓடைகள், ஆங்காங்கே இருக்கின்ற நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு பருவமழையில் பொழிகின்ற நீரை தேக்கி வைத்து, நிலத்தடி நீரை உயரச் செய்வதற்கு அம்மாவினுடைய அரசு திட்டங்கள் தீட்டி, செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.

அதேபோல, கல்வியிலே அம்மாவினுடைய அரசு புரட்சி கண்டுள்ளது. கடந்த ஆறாண்டுகளில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகமாக கல்லூரிகளை தொடங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அம்மாவினுடைய பொற்கால ஆட்சியில்தான் கிட்டத்தட்ட அரசு 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழ்நாட்டிற்குத் தந்தார்கள். ஏழை, எளிய மாணவர்கள் தங்கள் பகுதியிலேயே குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையை அம்மா உருவாக்கித் தந்திருக்கின்றார்கள். அம்மாவினுடைய அரசும் இந்த ஆண்டு 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்திருக்கின்றது.

ஆக, அம்மாவினுடைய அரசு, கடந்த ஆறாண்டுகளில் 76 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்து கல்வித்தரத்தை உயர்த்தியிருக்கின்றது. கிட்டத்தட்ட ஆறாண்டுகால ஆட்சியில், 31 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கியதின் விளைவாக, குக்கிராமத்தில் குடிசைகளில் வாழ்கின்ற மாணவ, மாணவிகள்கூட உலகப் பொது அறிவு பெறக்கூடிய விஞ்ஞானக் கல்வியை கொடுத்த ஒரே அரசு அம்மாவினுடைய அரசு. இன்றைக்கு உயர்கல்வி படிப்பவர்கள் 100-க்கு 44.3 சதவீதமாக உயர்ந்து, இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கக் கூடியவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

சுகாதாரத் துறையில், இந்தியாவிலேயே முதன்மை வகிக்கின்ற துறையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. கிராமப்புறத்தில் வசிக்கின்ற மக்களுக்கு, அங்கேயே சிகிச்சை அளிக்கக்கூடியவகையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும், தரம்உயர்த்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை அம்மாவினுடைய அரசு வழங்கியிருக்கின்றது. சுகாதாரத் துறையில், இந்தியாவிலேயே முதன்மையாக விளங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றரை கோடி தொண்டர்களால் கட்டப்பட்ட எஃகு கோட்டை, மாபெரும் இயக்கம் என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன். இதிலிருந்து ஒரு கல்லைக்கூட உங்களால் அசைக்க முடியாது என்பதை கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்”. இவ்வாறு அவர் பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*