Sliderஇந்தியா

ஏன் ரிசர்வ் வங்கியோடு நிற்க வேண்டும் – பகுதி 1

Rate this post

 

ஒரே ஒரு மதிப்புரை. ஒரு தேசத்தையும், அதன் ரிசர்வ் வங்கியையும் எதிர் எதிரே நிற்க செய்த கதை தான் இது.

வழக்கமாக வெறுமனே 100 எலீட்டுகள் கை தட்டி விட்டு, காபி சமோசா சாப்பிட்டு விட்டு கலைந்து போகும் எண்ணற்ற நினைவு மதிப்புரைகளில் அதுவும் ஒன்றாக போயிருக்கக் கூடும். ஆனால் இன்றைக்கு அந்த மதிப்புரை தான் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் யுத்தத்தையே உருவாக்கி இருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரான திரு. விர்ரல் ஆச்சார்ய்யா ஏ.டி. ஷெராஃப் நினைவஞ்சலி மதிப்புரை வழங்குவதற்கு முன்பு வரை அவர் பெயர் கூட இந்தியாவில் பலருக்கும் தெரியாது. ஆனால் அந்த ஒரு மதிப்புரை நிலையை தலைகீழாக மாற்றி விட்டது.

அந்த உரையில் அவர் சொன்னது (சுருக்கமாக)

“ஒன்றிய அரசு கடுமையாக ரிசர்வ் வங்கியின் பணிகளில் தலையிட தொடங்கி இருக்கிறது. அவர்களுடைய பாலிசிகள் டி20 கிரிக்கெட் போல குறைந்த கால தேவைகளோடு இருக்கிறது. ரிசர்வ் வங்கி என்பது டெஸ்ட் மேட்ச் போல. நாங்கள் நீண்ட கால பார்வைகளோடு இருக்கிறோம். இது இப்படியே போனால், அர்ஜெண்டினாவிற்கு ஆன கதி தான் நமக்கும் நடக்கும்”

உடனடியாக நிதியமைச்சகம், மத்திய அரசு, பிரதமர் அலுவலகம் என பல தரப்புகளில் இருந்தும் எதிர்வினைகள் வர ஆரம்பித்தன. நிதியமைச்சர் மேலே போய் “ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் மக்களுக்காக தான் இருக்கின்றன” என்று மறைமுகமாக ப்ளாக்மெயில் செய்தார்.

மத்திய அரசு ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு எண் 7-னை கையில் எடுத்தது. அதென்ன பிரிவு எண்-7?

Reserve Bank Act 1934 என்பது ரிசர்வ் வங்கியை இந்தியாவில் உருவாக்க முனைந்த சட்டம். பிரிட்டிஷ் காலத்திய சட்டத்தின் ஒரு ஷரத்து தான் பிரிவு எண் 7.

ரிசர்வ் வங்கி என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் தனித்து இயங்கக் கூடிய, தனித்து முடிவுகள் எடுக்கக் கூடிய ஒரு autonomy உள்ள அமைப்பு. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் ஆளும் மத்திய அரசால் ரிசர் வங்கி எடுக்கக் கூடிய முடிவுகளை மாற்ற முடியாது. இது தான் ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டிற்கான அடித்தளம் என்பதால் சட்டத்தை எழுதிய முன்னோர்கள் அதை ரிசர்வ் வங்கிக்கு தந்து இருந்தார்கள். ஆயினும், அதில் பிரிவு எண் 7 அரசு எப்போதெல்லாம் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை மீறி, தங்களுடைய அதிகாரத்தை உள்ளே செலுத்தலாம் என்று exceptions கொடுத்து இருக்கிறது.

//
(1) The Central Government may from time to time give such directions to the Bank as it may, after consultation with the Governor of the Bank, consider necessary in the public interest.

(2) Subject to any such directions, the general superintendence and direction of the affairs and business of the Bank shall be entrusted to a Central Board of Directors which may exercise all powers and do all acts and things which may be exercised or done by the Bank.

(3) Save as otherwise provided in regulations made by the Central Board, the Governor and in his absence the Deputy Governor nominated by him in this behalf, shall also have powers of general superintendence and direction of the affairs and the business of the Bank, and may exercise all powers and do all acts and things which may be exercised or done by the Bank.
//

மேலே சொன்னது தான் பிரிவு எண் 7ற்கான சட்ட வாக்கியங்கள். இதில் இரண்டு வாக்கியங்கள் முக்கியமானவை – “necessary in the public interest” “entrusted to a Central Board of Directors”

பொதுநலன் கருதி தான் இந்த முடிவை அரசு எடுக்கிறது என்று தங்களுடைய நிலையை முன் வைக்கிறது மத்திய அரசு. எது பொதுநலன் என்பது முதற் கேள்வி.

ரிசர்வ் வங்கியின் கவர்னர், துணை கவர்னர்கள் என்கிற நிர்வாக கட்டமைப்பினை தாண்டி, மத்திய அரசு நியமிக்கும் (Nominated) நபர்களைக் கொண்ட Central Board of Directors-க்கு ஒட்டு மொத்த அதிகாரத்தையும் ரிசர்வ் வங்கி தாரை வார்க்க வேண்டும். இது இரண்டாவது பார்வை.

அது என்ன பொதுநலன்?

மத்திய அரசு முன் வைக்கும் பொது நலன் என்பது இவை தான்.

1 ) IL&FS 90,000 கோடி பண இழப்பிற்கு பின்னால், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (Non Banking Financial Corporation – NBFCs) நிதி மூலங்கள் அடைக்கப்பட்டு விட்டன. அதனால் அவர்களுக்கு நிதி ஆதாரங்களை குறைந்த வட்டியில் தர வேண்டும்.

2 ) Prompt Corrective Action (PCA) என்கிற கட்டமைப்பிற்குள், ரிசர்வ் வங்கி வாராக் கடன்கள் அதிகமாக இருக்கக் கூடிய பொதுத் துறை வங்கிகளை சேர்த்து இருக்கிறது. வாராக் கடன்களின் தொகைக்கு ஏற்றாற் போல புதிய கடன்களை வழங்குதல், கொடுத்த கடன்களை திரும்ப வசூலித்தல் போன்ற நடவடிக்கைகளில் மட்டுமே தான் இந்த வங்கிகள் இயங்க முடியும். மத்திய அரசின் பார்வை, இதில் பலவீனமான வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அடிப்படை கேப்பிடல் தேவைகளை குறைக்க வேண்டும், அல்லது அவர்களே அளிக்க வேண்டும்.

3 ) எரிசக்தி உற்பத்தி நிறுவனங்கள் (Power Firms) வாராக் கடன்களில் சிக்கி தவிக்கின்றன. அவர்களுக்கு மட்டும் விலக்கு கொடுக்க வேண்டும். (அதானிகள், ஜிண்டால்கள் இன்ன பிற ஆட்கள் தான் இந்தியாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனங்களை [காற்றாலைகள், சூரிய ஒளி மின்சக்தி, நீராலைகள்] வைத்திருக்கிறார்கள் என்பது தகவலுக்கு)

4 ) சிறு,குறு நிறுவனங்களுக்கான கடன்களை வாராக் கடன்களின் பட்டியலோடு ஒப்பிடக் கூடாது. வங்கிகளை அவர்களுக்கான கடன்களைக் கொடுக்க அனுமதிக்க வேண்டும்

5 ) ரிசர்வ் வங்கியில் ஏற்கனவே 9,00,000+ கோடிகள் வருவாய் இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்காக 3,60,000 கோடிகளை அரசுக்கு தர வேண்டும். (ரிசர்வ் வங்கி இதை முழுமையாக நிராகரிக்கிறது)

இது தான் மத்திய அரசு முன் வைக்கும் பொது நலன். இதற்காக தான் இந்திய வரலாற்றில் இது நாள் வரை எந்த அரசாங்கமும் பயன்படுத்தாத பிரிவு எண் 7னைப் பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்குள் நுழைந்து, இருக்கும் நிதி ஆதாரங்களை ஆட்டையைப் போடப் பார்க்கிறது.

இவை தான் மத்திய அரசு சாம, தான, பேத, தண்டங்களை ரிசர்வ் வங்கியின் மீது வீசுவதற்கான அடிப்படை.

ஏன் மத்திய அரசு நெருக்குகிறது, மேலே சொன்ன காரணங்கள் நியாயமானவையா, உண்மையிலேயே நாம் ஸ்திரமாக இருக்கிறோமா என்பவை அடுத்த பகுதியில்.

தீபாவளிக்கான 3,60,000 சரவெடி இது தான்.
பத்த வச்சாச்சு, இனி மக்கள் பார்த்துக் கொள்வார்க

-Naren Rajagopal

#RBIVsGoI

Comment here