ஏர்செல் வழக்கில் ஆக., 7 வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை!

Rate this post

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தையும் ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடையை நீடித்து அமலாக்கத்துறைக்கு பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கதுறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் கோரிய சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையையும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முன்னதாக கடந்த 2006-ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் 10-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 7 வரை தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தின் மகன் கார்த்தி தற்போது ஜாமினில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*