வரலாறு

கடற் சிப்பிகள் கூறும் கதை:

 

கொற்கை பற்றிய இரு பதிவுகளையும் பார்த்துவிட்டு, கேரள பல்கலைக்கழக புவியியல் துறை தலைவர் பேராசிரியர் எஸ்.என். குமார் அவர்கள் இட்டுள்ள பின்னூட்டத்தை கீழே தருகிறேன்.

Sir, We belong to Maramangalam, a place 2 to 3 km from Korkai. Every year we reach our place on PainkuniUttiram to worship our KuladaivamDharmasasta. I have seen the area strewn with pelecypod shells.

பேராசிரியர் குறிப்பிடும் மாறமங்கலம் , கொற்கையையொட்டி வடக்கே அமைந்துள்ளது. PELELYCEPODA என்பது, PHYLUM: MOLLUSCA வின் ஒரு பிரிவு. இந்த சிப்பியினங்கள் கடலிலும், முகத்துவாரப் பகுதியிலும் வாழக் கூடியவை. இன்றைய மாறமங்கலம் பகுதியில் முற்காலத்தில் கடல் அல்லது முகத்துவாரப் பகுதி இருந்தது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Indian Journal of History of Science,( 47.2 (2012) 261-269) இதழில் SILTING AND ANCIENT SEA-PORTS OF THE TAMIL COUNTRY எனும் தலைப்பில், ஆய்வாளர் JEAN DELOCHE அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில், பிஷப் கால்டுவெல் அவர்கள், 1877 ஆம் ஆண்டு கொற்கையில் மேற்கொண்ட அகழ்வாய்வுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அந்த அகழ்வாய்வின் போது தரையிலிருந்து 1.8 மீ. ஆழம் வரை முகத்துவாரக் களிமண்ணும் அது சார்ந்த சிப்பிகளும், அடுத்த 30 செ..மீ. ஆழத்திற்கு பருக்கை மணற்கல் படிவங்களும் சிதைவுற்ற சிப்பிகளும் அதற்கும் கீழே ஏராளமான சிப்பிகளுடன் கடல் மணலும் கிடைத்திருக்கின்றன. தரையிலிருந்து 2.5 மீ. ஆழத்தில் மக்கள் குடியிருந்தமைக்கு சான்றாக பானை ஓடுகள் போன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன. பழைய காயல் பகுதியில் ஒன்று முதல் ஒன்றரை மீ. ஆழத்தில் சீன பீங்கான் ஜாடித் துண்டுகள் கிடைத்துள்ளன.

இரண்டாயிரம் அல்லது 2800 ஆண்டுகளுக்கு முன், இன்றைய கடற்கரையிலிருந்து எட்டு கி.மீ. மேற்கேயுள்ள கொற்கைக்கு அருகே இருந்த கடல் சிறிது சிறிதாக பின் வாங்கி சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் இன்றைய கடற்கரையிலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள பழைய காயல் அருகே இருந்திருக்கிறது. கடந்த எழுநூறு ஆண்டுகளில் மேலும் பின் வாங்கி, இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.

கொற்கையின் தொன்மையை அறியும் பொருட்டு, தமிழகத் தொல்லியல் துறையினர் 1968-69 ஆண்டுகளில் அகழ்வாவுகள் மேற்கொண்டனர். இராசவேலு – திருமூர்த்தி ஆகியோரின் “தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள்” எனும் நூலில் உள்ள செய்திகளின் அடிப்படையில், இந்த அகழ்வாய்வின் முடிவுகள், விக்கிப்பீடியாவில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. கட்டுரையின் தொடர்ச்சிக் கருதி அந்தத் தொகுப்பை நகலெடுத்து இணைத்திருக்கிறேன்.

“மொத்தம் தோண்டப்பட்ட 12 குழிகளில் சில முக்கியக்குழிகள்,
இரண்டாம் குழி
1.62மீ ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று கிடைத்தது. தமிழகத்தின் தொன்மையான இதே தாழி அடக்கமுறை ஆதிச்சநல்லூரிலும் காணப்படுகிறது.
மூன்றாவது குழி
செவ்வக வடிவ கட்டிடப்பகுதி.
நான்காம் குழி
செங்கற்சுவர் பகுதி. இதன் செங்கற்கள் 14297.5 செ.மீ. அளவினைக் கொண்டிருந்தன. மேலும் இக்கட்டிடத்தின் கீழ் கிணற்றின் உறைகளும் அதன் தெற்கில் கழிவு நீர் கால்வய்க்கான சுவடுகளும் உள்ளன. மேலும் இக்குழியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், சில கரித்துண்டுகளும் கிடைத்துள்ளது.
ஐந்தாவது குழி
நான்கு சாடிகள், சில எலும்புத்துண்டுகள், மட்கலண்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளன.
மற்ற குழிகள்
சில சங்குகள், சங்கு வளையல்கள், குறியீடுகள் கொண்ட பாணையோடுகளும் உள்ளன.
நான்காவது குழியில் கிடைத்த கரித்துண்டின் காலம் பொ.மு. 785[3] என்று மதிக்கப்படுவதால் (சி 14) அக்காலம் முதலே இங்கு கடல் போக்குவரத்து நடந்தது பற்றி அறிய முடிகிறது.
இங்கு காணப்படும் நாகரிகத்தை காலத்தைக் கொண்டு இதை 3 வகையாக பகுக்கின்றனர்.
1. முதல் பண்பாடு – கி.மு. 800 – கி.பி. 400
2. இரண்டாம் பண்பாடு – கி.பி. 401 – கி.பி. 1000
3. மூன்றாம் பண்பாடு – கி.பி.1001 – கி.பி.1400
அதன்படி முதற்பண்பாடே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.”

இதற்கிடையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பேராசிரியர் இரமேஷ் அவர்கள் அனுப்பியுள்ள தூத்துக்குடி பகுதிக்கான புவியமைப்பியல் வரைபடம் இன்று காலை கிடைத்தது. இந்த வரைபடத்தில், ஆறுமுகமங்கம் கிராமத்திற்கு மேற்குப் பகுதிவரை கடல்சார் படிவங்கள் காட்டப்பட்டிருப்பதும், கொற்கை, தாமிரபரணி ஆற்றின் தொல்தடக் கரையில் அமைந்திருப்பதும் நாம் மேற்சொன்ன கருத்துக்கு வலு சேர்கின்றன.

Comment here