இல்லறம்

கணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள்

ஒருசில குடும்பங்களில் கணவன் மனைவியிடையே காரணமின்றி பிரச்சினைகள் உருவாகும். வாக்குவாதங்கள் அதிகரிக்கும். அனுசரித்துச் செல்ல முடியாத நிலையால் விவாகரத்து வரை போய் நிற்கும். நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்ற பாகுபாடு மண வாழ்வில் ஏற்படுமாயின், அந்த வாழ்க்கை நரகமாகத்தான் இருக்கும். உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்சனை என்ற ஒன்று இல்லை. ஆனால், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு சின்ன பிரச்சினைகள் கூட மலையளவு பெரியதாக இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது கணவன் மனைவி மட்டுமின்றி அவர்களை சார்ந்திருக்கும் குடும்பமும்தான். இதனால் பிள்ளைகளுக்கும் நிம்மதி- குறைவு, தீயபழக்கங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை போன்றவை ஏற்படுகிறது.

பார்த்து பார்த்து செய்து வைக்கும் திருமணமானாலும்,அவர்களே தேர்ந்தெடுத்து அமைத்து கொள்ளக்கூடிய காதல் வாழ்க்கையானாலும் ஏனிந்த அவலநிலை என மனம் புண்படத்தான் செய்கிறது. ஜோதிட ரீதியாக ஏணிந்த பிரச்சினை ஏற்படுகிறது என ஆராய்ந்தோமானால் பல்வேறு உண்மைகள் புலப்படுகிறது.
ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 7ம் அதிபதியும், சுக்கிரனும் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவகிரகங்களில் ஏதாவது இரண்டு கிரகங்களின் சேர்க்கை பெற்று அமைவது நல்லதல்ல. இப்படி பாவகிரக சேர்க்கை பெற்றிருந்தால் இந்த கிரகங்களின் தசா புக்திகள் வரும் போது கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும்.

நவகிரகங்களில் ஞான காரகன், மோட்ச காரகன் என வர்ணிக்கப்படுவர் கேது பகவான். கேது பகவானானவர் ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாட்டை அதிகரித்து இல்வாழ்க்கையில் ஈடுபாட்டை குறைக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர். ஒருவரின் ஜாதகத்தில் கேது பகவானின் புக்தி நடைபெறும் காலங்களிலும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்களில் அமையப் பெற்ற கிரகங்களின் புக்தி நடைபெறும் காலங்களிலும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை ஏற்படும். அதிலும் குறிப்பாக 1,2,8 ல் கேது அமைந்திருந்தாலும், 7ம் அதிபதி கேதுவின் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும் கேதுவின் புக்தி காலங்களில் அதிக பாதிப்புகள் உண்டாகிறது.
சர்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் பின்னோக்கி சஞ்சரிக்கக்கூடியவர்கள். கோட்சார ரீதியாக ராகு, கேது ஒரு ராசியில் ஒன்றரை வருடங்கள் தங்குவார்கள்.

எப்படி ஜென்ம லக்னத்திற்கு 1,7, 2,8 ல் சஞ்சரிக்கும் போது ராகு, கேது, அதன் தசாபுக்தி காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார்களோ, 1,7, 2,8 ல் ராகு&கேது ஒன்றரை வருடங்கள் சஞ்சரிக்கும் காலங்களில் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகளையும், வீண் பிரச்சினைகளையும் உண்டாக்குவார். இதில் யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது என பார்த்தோமானால் அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, மூலம், சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அதிகப்படியான பாதிப்புகள் நெருக்கடிகள் உண்டாகிறது

Comment here