அரசியல்

கருணாநிதியுடன் முகஅழகிரி திடீர் சந்திப்பு..

Rate this post

திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இன்று நேரில் சந்தித்தார்.

கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, தென் மண்டல அமைப்பு செயலாளராக அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர். கட்சிக்குள் நெருக்கடி காரணமாக நீக்கப்பட்டதையடுத்து, அவர் ஒதுங்கியே இருந்து வருகிறார். ஆனாலும் திமுக தலைவர் கருணாநிதியையும் தயாளு அம்மாளையும் அவ்வப்போது சென்று சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.

சில சமயங்களில் திமுக குறித்த தன்னுடைய கருத்துக்களையும் சொல்லி வருகிறார். இரு தினங்களுக்கு முன்புகூட, மதுரையில் தனது ஆதரவாளர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட அழகிரி, மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்து பேசியிருந்தார்.

இந்நிலையில், மு.க.அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். அங்கு, கருணாநிதி மற்றும் தாயார் தயாளு அம்மாள் ஆகியோரை சந்தித்து அழகிரி அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்தார். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு பின்னர், புறப்பட்டு சென்றார்.

திமுக தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். சில சமயங்களில், அண்ணா அறிவாலயம் உள்பட மகள் கனிமொழி, மகன் தமிழரசு ஆகியோரின் வீடுகளுக்கும் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Comment here