அரசியல்

கர்நாடகத்தில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென கர்நாடக மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவைக் கண்டித்து அம்மாநிலத்தில் வெள்ளிக்கிழமையன்று முழு அடைப்புப் போராட்டம் நடந்துவருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மைசூரு,பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் போக்குவரத்து முடங்கியிருக்கிறது.

பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

இந்த ஆண்டில் காவிரியில் போதுமான நீர்வரத்து இல்லாத நிலையில், காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதையடுத்து, இடைக்கால நிவாரணமாக விநாடிக்கு 15 கன அடி தண்ணீரை திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குப் பின், கடந்த ஆறாம் தேதியிலிருந்து கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி நீரும் ஹேமாவதி அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதையடுத்து கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூரு, மண்டியா, ஹசன் ஆகிய மாவட்டங்களில் கன்னட அமைப்புகளும் விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின. பேருந்துகளும் சரக்கு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதன் காரணமாக, கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக, இரு மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு, அரசு ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட பெரும்பாலான ஊழியர், தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முழு அடைப்பின்போது மாநிலம் முழுவதும் தமிழ் சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளிக்கிழமை காலை ஆறு மணியிலிருந்தே மாநிலத்தின் பல பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் கன்னட அமைப்புகள், உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகவும் தமிழகத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர்.

பல இடங்களில் தமிழக முதல்வரின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது.

வாடகைக் கார்கள் இயங்காத காரணத்தால் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தடைந்த பயணிகள் வெளியேறிச் செல்வதற்கு முடியாமல் விமான நிலையத்திலேயே தங்கியிருக்கின்றனர். அவர்கள் அமர்வதற்கு கூடுதல் இடங்களை விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இருந்தபோதும் மங்களூர் மற்றும் தென் கன்னட மாவட்டங்களில் இந்த முழு அடைப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Comment here