கர்நாடகா தேர்தல் : வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது!

Rate this post

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. வரும் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் 222 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெற்றது. பெங்களூர் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் வி.என். விஜயகுமார் மாரடைப்பால் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கும், போலி வாக்காளர் அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டதால் ராஜ ராஜேஸ்வரி நகரிலும் இன்று தேர்தல் நடைபெறவில்லை.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இத்தேர்தலுக்காக மொத்தம் 58,302 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குச்சாவடியைச் சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் 1.5 லட்சம் போலீசார் ஓட்டுப்பதிவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சுமார் 70 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதியான வாக்குப்பதிவு புள்ளி விவர தகவல் இன்று இரவு அல்லது நாளை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இத்தேர்தல் முன்னோட்டமாக அமையும் என்பதால் கர்நாடக சட்டசபை தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*