கர்நாடகா : தொங்கு சட்டசபை! ஆட்சி அமைக்க அண்டர்கிரவுண்ட் பேச்சு வார்த்தைகள் தீவிரம்

Rate this post

கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேசமயம், தென் மாநிலத்துக்கு நுழைவு வாயிலான கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்பதற்காக மதர்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமியிடமும் ரகசியப் பேச்சுகளை பாஜகவினர் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் தற்போதைய நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் தொங்கு சட்டசபை அமையும் சூழல் ஏற்பட்டு, காங்கிரஸ்-மஜத கூட்டணியும் அமைந்துள்ளதால் ஆளுநர் வாஜூபாய் வாலாவின் பக்கம் அனைவரது கண்களும் திரும்பியுள்ளன.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதல் பெரும்பான்மை இடங்களில் முன்னணி வகித்து வந்த பாஜக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால், இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 106 இடங்களில் மட்டுமே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

அதேபோல், காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருவதால் அங்கு தொங்கு சட்டசபை அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதால் இக்கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டு ஆட்சியமையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் மதசார்பற்ற ஜனதாதளம் கிங் மேக்கராக திகழும் என்ற தேர்தலுக்கு முன் மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது பலித்துள்ளன. அதேசமயம், தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் ஆளுநர் முக்கிய பங்காற்றுவார். தற்போது கர்நாடக ஆளுநராக வாஜூபாய் வாலா உள்ளார். பாஜகவைச் சேர்ந்த இவர், குஜராத்தில் அமைச்சராகவும், சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் மாநில ஆளுநர்கள் எடுத்த முடிவுகள் பாஜக-வுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. கர்நாடக மாநிலத்திலும் பாஜக-வை சேர்ந்தவரே ஆளுநராக இருப்பதால் அவரது முடிவும் பாஜக-வுக்கு ஆதரவாகவே இருக்கும் என பரவலாக பேசப்படுகிறது.

முன்னதாக, கோவா, மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை பார்த்தால் காங்கிரஸ் கட்சியை விட பாஜக குறைவான இடங்களில் வென்றிருந்தாலும் இதர கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சியை பிடித்துள்ளது.

கோவா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், அங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் அழைக்கவில்லை. பின்னர், இரண்டாம் இடம் பெற்ற பாஜக, சிறிய கட்சிகளுடன் ஆதரவுடன் அங்கு ஆட்சியமைத்தது. அதுபோன்ற சூழல் மேகலாயாவிலும் ஏற்பட்டது. அப்போது, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மக்கள் கட்சியின் தலைமையில் இதர சிறிய கட்சிகளை பாஜக இணைத்தது. அதையடுத்து, முன்னாள் தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா தலைமையிலான ஆட்சி மேகாலயாவில் ஏற்பட்டது.

அதேபோன்ற நிலை தான் தற்போது கர்நாடகாவிலும் ஏற்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகாவை பொறுத்தவரை பாஜக அதிக இடங்களை பிடிக்கும்; பெரும்பான்மை கிடைக்காது. எனவே, மாநில ஆளுநரின் முடிவை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்.

கர்நாடகத்தை பொறுத்தவரை கோவாவில் நடைபெற்றது போன்று நடைபெற வாய்ப்பில்லை. எஸ்.ஆர்.பொம்மை வழக்கை சுட்டிக் காட்டி, பெரும்பான்மை இடங்களில் வென்றிருக்கும் பாஜக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம். அதன்பின்னர், பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க கோரி அக்கட்சிக்கு ஆளுநர் உத்தரவிடலாம். இதற்குள் தனக்கு தேவையான எம்எல்ஏ-க்களின் ஆதரவை பெற பாஜக முயற்சிக்கும். எனவே, குதிரை பேரங்களும், எம்எல்ஏ-க்கள் ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்படும் சூழலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சற்று முன் வந்த தகவல்:

கர்நாடகாவில் ஆட்சியமைக்க, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது. இது தொடர்பாக காங்., மூத்த தலைவர்கள் தேவகவுடா மற்றும் குமாரசாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், காங்கிரசின் ஆதரவை ஏற்று கொள்வதாகவும், ஆட்சியமைப்பது தொடர்பாக நேரில் சந்திக்க அனுமதி வழங்கும்படி அதில் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*