Uncategorizedஇந்தியா

கர்நாடக தண்ணீர் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு

காவிரி நீர் பங்கீட்டில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு என்ற அமைப்புகளை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இந்த 2 அமைப்புகளிலும் மேற்கண்ட 4 மாநிலங்களில் இருந்தும் தலா ஒரு அதிகாரி உறுப்பினராக உள்ளார். இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும், நீர் பங்கீட்டு அளவு விவரத்தையும் விவாதித்து வருகின்றன.

அந்தவகையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு இன்னும் இந்த வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீரை வழங்கவில்லை.

இந்த தகவலை கடந்த 7-ந்தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் பதிவு செய்தனர். ஆனால் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உள்ளது என்பதால் கடந்த ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் மழை பற்றிய புள்ளி விவரங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள் மற்றும் தரவுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் மீண்டும் இன்று நடைபெற்றது. தமிழகம் தரப்பில் தண்ணீர் திறந்துவிடக்கோரி வலியுறுத்தப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3–வது கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே இந்த மாத இறுதிக்குள் உரிய தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேகதாது அணை விவகார வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், அதுபற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்க கூடாது என கூறப்பட்டது. தமிழ்நாடு மற்றும் பிற படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை மீறும் வகையிலும் காவிரி படுகையில் எவ்விடத்திலும் அணை, நீர்த்தேக்கம் மற்றும் நீரை திருப்புவதற்கான கட்டுமானங்களை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு ஆணையம் அனுமதி வழங்கக் கூடாது என முறையிடப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன், ஆணையத்தின் 4–வது கூட்டத்தில், நீர் பங்கீடு மற்றும் காவிரி படுகையில் பெய்துள்ள மழை அளவு உள்ளிட்டவை குறித்த புள்ளிவிவரங்கள் முன்வைக்கப்பட்டன. காவிரி படுகையில் மழையளவு வெகுவாக குறைந்துள்ளது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. பிலிகுண்டுலு பகுதியில் இருந்து ஜூன் மாதத்துக்கு 9.19 டிஎம்.சி. மற்றும் ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை (மொத்தம் 40.43 டிஎம்.சி.) கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும். நீர்வரத்து சாதாரணமாக இருக்கும் பட்சத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் குறிப்பிட்டுள்ள நீரின் அளவை கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திறந்து விட வேண்டும்.

புதுச்சேரியை பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையில் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீர்ப்பங்கீடு தொடரும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பருவ மழை சரியாக பொழிந்து காவிரி படுகையில் நீர்ப்பற்றாக்குறை நீங்கும் என்று நம்புகிறோம் எனக் கூறியுள்ளார்.

Comment here