கலைஞர் கருணாநிதி காலமானார்!

Rate this post

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி மறைவையடுத்து, தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், கருணாநிதி மறைவுக்கு அவர் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். `கலைஞர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரின் குடும்பத்தாருக்கும் மற்றும் கோடிக்கணக் கான மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தவர். கடந்த அரை நூற்றாண்டு காலம், தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் திகழ்ந்தவர், அரசியலிலும், திரைப்படத் துறை யிலும் பல சாதனைகள் புரிந்தவர் கருணாநிதி. தமிழக சட்டசபைக்கு 13 முறை போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்ற  தலைவர் என்பதுடன் கடந்த நூற்றாண்டில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக, மக்கள் மத்தியில் மாபெரும் சக்தி பெற்றத் தலைவராக வாழ்ந்து இன்று மறைந்திருக்கிறார்.

வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கருணாநிதி ஓய்வில் இருந்துவந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்களால் அவருக்கு கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படவே அவர், காவேரி மருத்துவ மனையில் கடந்த மாதம் 28-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இதுவரை 7 அறிக்கைகள் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இன்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கை யில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கருணாநிதி உயிரிழந்துவிட்டதாகக் காவேரி மருத்துவமனை தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், உடல்நிலை ஒத்துழைக்காததால் இன்று (7.8.2018) மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் உயிர் பிரிந்தது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை இழந்துவிட்டோம். உலகத் தமிழர்கள் மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் துக்கத்தில் பங்கெடுக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையொட்டி நாளை அரசு விடுமுறை  அளிக்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*