காஞ்சியில் பிச்சை எடுத்த ரஷ்ய வாலிபருக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ்!

5 (100%) 1 vote

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் பிச்சை எடுத்த ரஷ்யாவை சேர்ந்த வாலிபருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட எவிங்வி பர்த்திகோவ் நிச்சயம் உதவிகள் செய்யப்படும் என்றும் அவரை பற்றிய செய்திகளை தான் டிவிகளில் பார்த்ததாகவும், ரஷ்யா, இந்தியாவிற்கு மிக நெருங்கிய நட்பு நாடு என்றும் சென்னையில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள் கட்டாயம் உங்களுக்கு (எவிங்வி) உதவுவார்கள் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .

முன்னதாக ரஷ்ய நாட்டை சேர்ந்த எவிங்வி பர்த்திகோவ் இந்தியாவில் கோயில்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளை பார்க்க வந்துள்ளார்.இந்தியா வந்த அவர், காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மாமல்லபுரம் கடற்கரை ஆகியவற்றையும் சுற்றி பார்க்க விரும்பினார். அதன்படி நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வந்த அவர் கோயில்களை சுற்றிப் பார்த்தார்.அப்போது, அவரது ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்க சென்றார். அப்போது, அவரது ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த அவர், அந்த கார்டை உடைத்து எறிந்துவிட்டார். பின்னர், பணம் இல்லாமல் வேறு வழியின்றி தவித்தார்.இந்நிலையில், நேற்று காலை சுமார் 7 மணியளவில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு பர்த்திகோவ் சென்றார்.

அங்கு, கோயில் நுழைவாயிலில் கீழே உட்கார்ந்த அவர், தனது தொப்பியை கழற்றி கையில் வைத்து கொண்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பிச்சை எடுத்துள்ளார்.நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகளவில் வந்த பக்தர்கள் வியப்புடன் வெளிநாட்டு வாலிபர் பிச்சை எடுப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.தகவலறிந்து, சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பர்த்திகோவிடம் விசாரித்தனர்.அதில், ரஷ்ய நாட்டை சேர்ந்த வாலிபர் என்றும் முறையான பாஸ்போர்ட், விசா பெற்று இந்தியா வந்துள்ளதும் தெரியவந்தது. மேலும் செலவுக்கு பணம் இல்லாததால் பிச்சை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவரிடம் பேசிய போலீசார், சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு சென்று தீர்வு காணுமாறு அறிவுரை கூறி அனுப்பினர். மேலும் போலீசாரே மனிதாபிமானத்துடன் பணம் கொடுத்து சென்னை செல்வதற்காக, அவரை அழைத்து சென்று காலை 10.15 மணிக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*