ஆன்மிகம்பிரத்யகம்

காரைக்கால் பிச்சாண்டவர் மாங்கனித் திருவிழா

             god1

                   காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவில், மாங்கனிகளை பக்தர்கள் மீது இறைத்து வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது.

புனிதவதியார் என்ற பெயருடன் இளமைக் காலத்தில் சிவபக்தராக இருந்த காரைக்கால் அம்மையாருக்கும் பரமதத்தருக்கும் திருமணம் நடந்தது, அம்மையாரின் புனிதம் நிறைந்த சிவபக்தியை அறிந்த பரமதத்தர், அம்மையாருடன் இல்லற வாழ்க்கை நடத்துவது முறையாகாது எனக்கருதி, இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அம்மையாரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கியது, இதனால், அம்மையார் தனது இளமைக் கோலத்தை துறந்து, பேய் உருவம் வேண்டிப் பெற்று, கயிலாயத்துக்குச் செல்லும்போது இறைவன் வீற்றிருக்கும் இடத்தில் காலால் நடந்து செல்வது ஆகாதென்று தலைகீழாக கைகளை ஊன்றி சிவபெருமானை தரிசனம் செய்தது, அப்போது அவரது பக்தியை மெச்சும் வகையில் சிவபெருமான் “அம்மையே’ என அவரை அழைத்தது போன்ற நிகழ்வுகளை விளக்கி, காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சார்பில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது.

நிகழாண்டுக்கான இத்திருவிழா ஜூன் 17-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்புடன் தொடங்கியது. 18-ஆம் தேதி காலை திருக்கல்யாணமும், மாலையில் பரமதத்தரும், புனிதவதியாரும் முத்துச் சிவிகையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஸ்ரீ பிச்சாண்டவர் (சிவபெருமான்) உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. பின்னர், பவழக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் வேடத்தில் அம்மையார் வீட்டுக்கு மாங்கனியுடன் உணவருந்தச் செல்லும் நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஊர்வலத்தில் யானை முன் செல்ல, வேதபாராயணம் முழங்க நாகசுரம், ராஜவாத்தியங்கள், கேரள செண்டை மேளங்கள் இசைக்க காரைக்காலின் முக்கிய வீதிகளில் பவழக்கால் சப்பரம் சென்றது.

அப்போது, கட்டடங்களின் மேல் நின்றவாறு நேர்த்திக் கடனாக பக்தர்களை நோக்கி மாங்கனிகளை இறைத்தனர். இந்த மாங்கனிகளை பக்தர்கள் இறைவனின் பிரசாதமாகக் கருதி வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதாகோயில் வீதி, லெமேர் வீதி வழியாகச் சென்ற பவழக்கால் சப்பரம் மாலையில் அம்மையார் கோயில் அருகே சென்றதும் புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்) பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைக்கும் வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Comment here