மாவட்டம்

கால்நடை பராமரிப்புத் துறை

‘தேசிய கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) தடுப்பூசித் திட்டத்தின்” கீழ் கடலூர் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டில் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 16வது சுற்று தடுப்பூசிப்பணி அனைத்து கிராமங்களிலும் 3.5 இலட்சம் எண்ணிக்கை உள்ள பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கும் 100% தடுப்பூசிப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 52 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

கால் மற்றும் வாய் நோயானது (கோமாரி) கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன்¢ குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம்.

மேலும் இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும் இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

ஆகவே, இந்த நோயை கால்நடைகளுக்கு ஏற்படாவண்ணம் தடுப்பதற்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள செயல்திட்டம் தீட்டி ஆண்டுக்கு இருமுறை வீதம் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 15வது சுற்று முடிந்து விட்டது. தற்போது மார்ச் 8 முதல் மார்ச் 28 முடிய 16வது சுற்று தடுப்பூசி பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சி, நகரியம் மற்றும் நகராட்சிகளில் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனடிப்படையில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய கோட்டங்களில் உள்ள 3.5 கால்நடைகளுக்கும் மார்ச் 8 முதல் 28ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் இது தொடர்பாக கிராமப்புற விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் 06.03.2019 தேதி அன்று நடத்தப்பட்டது. இதில், கிராமமக்கள் அனைவரும் கால்நடை மருத்துவர்கள் கூறும் அறிவுரைப்படி, கால்நடைகளை அவர்களால் குறிப்பிடப்படும் தேதியில், குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசிப் போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருமக்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு, 2019ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் தடுப்பூசி முகாமில், தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மண்டல இணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர்,
கால்நடை பராமரிப்புத்துறை, கடலூர்.
கடலூர்.

Comment here