காவிரி மேலாண்மை – மத்திய அரசு பணிந்தது!

Rate this post

தமிழர்களின் நெடு நாள் கோரிக்கையான காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

காவிரி வழக்குகளின் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவது குறித்த செயல் திட்ட வரைவை மே 14-ம் தேதிக்குள் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான செயல் வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அன்றைய தினம் தாக்கல் செய்தது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தில், காவிரி வாரியம், மேற்பார்வை குழு அல்லது ஆணையம் அமைக்க தயார். காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை இந்த அமைப்பானது மேற்கொள்ளும் என மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை மே 16-ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்து.

அதன்படி, காவிரி வழக்கானது இன்று மீண்டும் உச்ச நேதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜராகிய கர்நாடக அரசு வழக்கறிஞர், அம்மாநிலத்தில் புதிய அரசு அமையவுள்ளதால் வழக்கை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதேபோல், தமிழக தரப்பில் காவிரி அமைப்பின் புதிய தலைமையகம் பெங்களூருவில் அமைய கூடாது. அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என இரண்டு கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தொடர்ந்து, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், செயல் திட்ட வரைவில் இடம்பெற்றுள்ள ‘இறுதி முடிவை மத்திய அரசே ஏற்கும்’ என்ற அம்சத்தை நீக்க வேண்டும். காவிரியின் குறுக்கே எந்த அணையையும் எந்த அரசும் கட்ட கூடாது. வாரியம் அமைத்த பின் வாரியத்தின் அனுமதியுடன் அணை கட்டிக் கொள்ளலாம். காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். திருத்தப்பட்ட செயல் திட்டத்தை நாளை சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, பெயர் வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறி, காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் நதிநீர் பங்கீடு குழுஅமைக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*