அரசியல்தமிழகம்

காவிரி வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம்!பேரவையில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

காவிரி நதிநீர் வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து, முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஆற்றிய உரை:-

காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத்தில் இறுதி உத்தரவு 2007-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்த இறுதி உத்தரவை மத்திய அரசிதழில் வெளியிடவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, மத்திய அரசு தனது இதழில் காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை வெளியிட்டது. ஆனாலும், இதனை நடைமுறைப்படுத்த தேவையான காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசிலும் அமைக்கப்படவில்லை. இப்போதைய பாஜக அரசாலும் உருவாக்கப்படவில்லை.

இவற்றை அமைக்க வேண்டும் என பிரதமரை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். கடந்த ஜனவரியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், மேலாண்மை வாரியத்தையும், நதிநீர் முறைப்படுத்தும் குழுவை அமைப்பது குறித்து மத்திய சட்டம்-நீதித் துறையுடன் கலந்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதியன்று பிரதமரை புதுதில்லியில் சந்தித்து அளித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியன அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசால் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் நீண்ட கால நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் காவிரி நதிநீர்ப் பிரச்னையும் ஒன்றாகும். இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வரும் போது, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வலியுறுத்தப்படும். அதில் நாம் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் தெரிவித்தார்.

Comment here